பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

754

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பகுதிகளில் எல்லாம் ஒளியைப் பரப்புவது போல, அவள் மாலையிடாமல் பின்னடைய விட்ட அரசர்கள் முகத்தில் இருளையும், நமக்கு அணிவிப்பாள் என்ற மகிழ்ச்சியில் மீதமிருந்த எதிர் வரும் அரசர் முகங்களில் ஒளியையும் தோற்றுவித்தாள்” என்று கூறியபடியே புவனேசுவரியின் முகத்தைப் பார்த்தான் சுந்தரராஜன். அவளை நேராகவோ, திருட்டுத்தனமாகவோ பார்த்தால் கூட உடனே அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.

அவன் காவியத்தில் படித்த இந்துமதி அங்கே புவனேஸ்வரியாக அமர்ந்திருந்தாள். அவள் கவனித்துக் கேட்கிறாள் என்பதற்காகவே அப்பகுதியைப் பிரமாதமாக வருணித்தான் அவன். அப்போது அவள் அவனது தூண்டுதலாயிருந்தாள்.

அவளுடைய குரலை அன்றும் ஒருமுறை கேட்கும் ஆசையோடு அவளையே ஒரு கேள்வியும் கேட்டான் அவன்.

புவனேஸ்வரி எழுந்து பதில் கூறினாள். அவளுடைய சங்கீதக் குரல் அவனுள் உறைந்திருந்த சங்கீதங்களை மீட்டியது. “போங்க சார்! நீங்க எப்பக் கேள்வி கேட்டாலும் புவனாவை மட்டுமே கேட்கிறீங்களே?” என்று மற்றொரு மாணவியிடமிருந்து பொறாமை வெடித்தது.

அவளையும் ஒரு கேள்வி கேட்டுச் சமாதானப்படுத்தினான் சுந்தரராஜன். வகுப்பு முடியப் பத்து நிமிஷங்கள் மீதமிருந்தன. தன்னுடைய கதைகளில் எதையாவது ‘சண்பகத்’தில் புவனேஸ்வரி படித்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆசையாயிருந்தது. ஆனால் அதை நேருக்கு நேர் அவளிடம் மட்டுமே கேட்க அவனுக்கு வகுப்பில் தயக்கமாயிருந்தது. துணிந்து முதலில் கேள்வி கேட்ட பெண்ணிடமே, அந்த வினாவைத் தொடங்கினான் அவன். அவள் பதில் கூறினாள்:

“எனக்குத் தெரியாது சார்! கதை எழுதறது. நீங்க தானான்னு உங்களைப் புவனாதான் கேட்கச் சொன்னா சார்” என்று பதில் சொன்னாள் அந்தப் பெண்.

“அவளே கேட்டால் என்ன? அவளுக்காக நீ கேட்டது ஏன்?”

“அவ உங்க கிட்டக் கேட்கப் பயப்பட்டா சார்!”

சுந்தரராஜன் புவனேஸ்வரியைப் பார்த்தான். நாணமும், நகையும் குழம்பி அவள் முகம் சிவந்தது. அவள் அவனை நேரே பார்க்கத் தயங்கி இருந்தாள்.அவ்வளவில் மணி அடித்தது. சம்ஸ்கிருத வகுப்பும் கலைந்தது. சுந்தர ராஜனின் மனத்தில் பூக்கள் மணத்தன. இசைகள் சுருதி கூட்டி ஒலித்தன. அன்று மாலை ஸ்கூல் விட்டதும் அறைக்குப் போய் அவன் ஒரு கதை எழுதினான். துணிந்து அந்தக் கதையில் வரும் பெண்ணுக்குப் புவனேஸ்வரி என்றே பெயர் வைத்தான் - எங்கோ இருக்கும் வாத்தியத்தை அவன் மனம் பாவனைகளில் மிருதுவாக மீட்டியது. அது மிகவும் சுகமாக இருந்தது. கதையைத் தபாலில் சேர்ப்பித்த பின் பெயர் விஷயம் அவனுக்கு மறந்து விட்டது. மேலும் இரண்டு மூன்று வாரத்தில் அந்தக் கதை எப்போது