பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாத்தியங்களும் விரல்களும்

755

வெளிவரும் என்பதைக் கூட அவன் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அதை மறந்துவிட்டான்.

அரைப் பரீட்சைக்கு முன்பு ஒரு வாரம் இருக்கும் போது திடீரென்று சம்ஸ்கிருத வகுப்பில் முன்பு கேள்வி கேட்ட அதே பெண் எழுந்திருந்து அவனை ஒரு கேள்வி கேட்டாள்:

“இந்த மாத 'சண்பகம்’ பத்திரிக்கையிலே உங்க கதை ரொம்ப நல்லாயிருக்கு சார்! கதையிலே வர்ர பெண்ணுக்குக் கூடப் புவனேஸ்வரின்னு பேர் வைச்சிருக்கீங்களே...?”

“சண்பகம், எப்போது வந்தது? எனக்கு இன்னும் கிடைக்கலியே? தபாலில் தவறி விட்டதா?” என்று பேச்சை மாற்ற முயன்றான் சுந்தரராஜன். உண்மையிலேயே அவனுக்கு அந்த மாதச் 'சண்பகம் தபாலில் கிடைக்கவில்லை. எனவே கதை வந்திருந்ததும் அவனுக்குத் தெரியாது. அந்தப் பெண் ஸ்கூல் லைப்ரரியில் அதைப் படித்திருக்கிறாள். அந்தக் கதை வெளி வந்ததை அறிந்து அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

“நீ அதுக்குள்ளே படிச்சாச்சா?” - என்று அந்தப் பெண்ணையே மேலும் கேள்வி கேட்டு, வாயைக் கிளறினான் அவன்.

“நிஜமாச் சொல்றதா இருந்தா, நான் அதை முதல்லே படிக்கலே சார்! முதல்லே படிச்சது புவனாதான். ஆனா...”

“ஆனா. என்ன…? சும்மாச் சொல்லேன்.”

“முதல்லே தான் படிச்சதாக உங்ககிட்டச் சொல்லப்பிடாதுன்னு அவதான் என்னைப் பயமுறுத்தினாள்.”

“இதிலே பயம் என்ன?”

“அவளுக்குப் பயம்தான்.”

அவன் புவனாவைப் பார்த்தான். மேகத்தில் மறையும் சந்திரனைப் போல் அவள் முகம் கருங்கூந்தலோடு மெல்லக் கீழே குனிந்தது. இதழ்களில் நாணம் மூடி மறைக்க முயன்றும், மலர்வது தவிராத நகை இழையோடிக் கொண்டிருந்தது. முதலில் கேள்வி கேட்ட பெண் படு வம்புக்காரியாக இருந்தாள். மீண்டும் அவளுடைய கேள்வியே தொடர்ந்தது.

“புவனா மேலே எப்பவுமே உங்களுக்குக் கொள்ளைப் பிரியம் சார்! இல்லையா?”

“கதையிலே பேர் வச்சால் பிரியம்னு ஆயிடுமா? உலகத்திலே இவ ஒருத்திதான் புவனாவா? எத்தனையோ பேருக்குப் புவனேஸ்வரின்னு பேர் இருக்கே? அந்தப் பேரு இவளுக்கு மட்டுமே சொந்தமா, என்ன?”

“ஐயையோ! அப்பிடீன்னா நீங்க நம்ம புவனேஸ்வரி பேரை எழுதலியா சார்?”

“இல்லை! இல்லை கற்பனைக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமே படுத்தக் கூடாது.”