பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

756

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வகுப்பினரிடமிருந்து தன் ஆசிரியத் தன்மையின் கெளரவத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகக் கண்டிப்பான குரலில் இப்படிப் பதில் கூறினான் அவன். வகுப்புத் தொடர்ந்தது.

ஐந்து நிமிடத்திற்குள் வகுப்பில் திடீரென்று யாரோ விசும்பி அழும் மெல்லிய ஒலி கேட்டது.

“சார்! புவனா அழறா சார்!”

“ஏன்? அவளுக்கு என்னவாம்?”

“தெரியலே சார்!”

“எதுக்காக அழறே? கிளாஸ்லே அழுதா எப்பிடிப் பாடம் நடத்தறது…?”

பதில் பேசாமல் எழுந்து தலைகுனிந்து நின்றாள் புவனேஸ்வரி.

“ஏன் அழுதாய்?”

“----“

“பதில் சொல்லித் தொலையேன்?”

“----“

“பதில் சொல்லாட்டா இப்படியே நிற்கவேண்டியதுதான்.” அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டே இருந்தாள். பரிதாபமாகவும் இருந்தது. அவளை நிற்க வைத்து விட்டு வகுப்பைத் தொடரவும் அவனுக்கு மனமில்லை. வயது வந்த பெண் வகுப்பில் கண்ணீர் விட்டு அழுவதையும் பொறுக்க முடியவில்லை. ஹெட்மாஸ்டர் வேறு திடீரென்று ‘ஸுபர்விஷனுக்’கு வந்தால் பெரிய வம்பாகி விடும். நிறுத்தி வைத்திருந்தாலும், வயது வந்த பெண்ணை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று அவர் சுந்தரராஜனைக் கூப்பிட்டுக் கேட்கலாம். அழுதுகொண்டே இருந்தாளானால் ‘ஏன் அழுகிறாள்’ என்று ஹெட்மாஸ்டர் கேட்கக் கூடும்.

“நீ கிளாஸில் இருக்க வேண்டியதில்லை. அழுவதானால், வீட்டில் போய் அழலாம்.” . -

அவள் தயங்கித் தயங்கிப் புத்தகக் கட்டை மார்பில் அணைத்தவாறே வகுப்பை விட்டு வெளியேறினாள். வகுப்புத் தொடர்ந்தது. பாடம் நடத்துவதில் அவனுக்கு மனம் செல்லவில்லை. பாடத்தில் ஒரிடத்திலே “சீதையும், ராமனும் கோதாவரி நதிக்கரையில் இருந்த போது” என்று சொல்வதற்கு பதில் “புவனேஸ்வரியும், ராமனும் கோதாவரி நதிக் கரையில் இருந்த போது” என்று வாய் தவறி உளறி விட்டான். வகுப்பில் எல்லாப் பெண்களும் உடனே சிரித்து விட்டார்கள்.

அன்று முழுவதுமே அவனுக்கு வேதனையாயிருந்தது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து அநாவசியமாக ஒரு பேதை மனத்தைப் புண்படுத்த நேர்ந்து விட்டதே என்று அவன் மனம் வருந்தியது.

மறு நாள் காலையிலும் அவள் வகுப்பிற்கு வரவில்லை. இடைவேளையின் போது அவளுடைய தோழி ஒரு கடிதத்தை அவனிடம் அக்கம்பக்கம் பார்த்துக் கவனமாகத்