பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாத்தியங்களும் விரல்களும்

757

தனியே இருக்கும் போது கொண்டு வந்து கொடுத்தாள். சுந்தர ராஜன் முதலில் அதை வாங்கத் தயங்கினான்.

“புவனா கொடுத்தா சார்!” என்றபடி அவன் முன்னே மேஜையில் வைத்து விட்டு ஓடி விட்டாள் அந்தப் பெண்.

அதை எடுத்துப் பிரித்தான் சுந்தரராஜன்.

“மதிப்பிற்குரிய சம்ஸ்கிருத வாத்தியாருடைய பாதார விந்தங்களுக்கு அடியாள் புவனேஸ்வரி கோடி நமஸ்காரம். வகுப்பில் “ஏன் அழுதாய்” என்று நேற்றுக் கேட்டீர்கள். உங்கள் கதையில் என் பெயர் வந்தது பற்றி நான் என் தோழிகளிடம் எல்லாம் சொல்லிப் படித்துக் காட்டிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். நீங்களோ திடீரென்று, “கதையில் பேர் வச்சாப் பிரியம்னு ஆயிடுமா? உலகத்திலே இவ ஒருத்திதான் புவனாவா? எத்தனையோ பேருக்குப் புவனேஸ்வரின்னு பேர் இருக்கே, அந்தப் பேரு இவளுக்கு மட்டுமே சொந்தமா என்ன?”ன்னு கோபமாகக் கேட்டீங்க. எனக்குத் தெரிஞ்சு நம்ம ஸ்கூல்லே புவனேஸ்வரீங்கற பேரு எனக்கு மட்டும்தான் இருக்கு. என் தோழிகளிடம் நான் கதையைப் படித்துக் காட்டிப் பெருமையடித்துக் கொண்டதை எல்லாம் ஒரு நிமிஷத்தில் கேலிக் கூத்தாக்கி, என்னைத் தலை குனிய வச்சாச்சு. இனிமே உங்களைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருக்கு. நீங்க ரொம்பக் கோபக்கார சார் மாதிரி ஆயாச்சு. நான் கிளாஸுக்கு வரவா, வேண்டாமா? தயவுசெய்து (இக்கடிதம் கொண்டு வரும்) வத்ஸலாவிடம் சொல்லி அனுப்பவும்.

உங்கள்,
சா. புவனேஸ்வரி
ஆறாம் படிவம் ஏ-பிரிவு
ஆர்.பி. போர்டு உயர்பள்ளி

கடிதத்தைப் படித்ததும், சுந்தரராஜனின் மனத்தில் தென்றல் வீசியது. பதினைந்து நிமிஷத்திற்குப் பின், அந்தப் பெண் வத்ஸலா-அவள்தான் புவனாவின் தோழி-மெல்லத் தலையை நீட்டினாள். அவன் முகம் கடுமையாயிருக்க முயன்றது.

“இந்தா! மத்தியான மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. உன் சிநேகிதியை நான் கூப்பிட்டேன்னு கூட்டிக் கொண்டு வா! பரீட்சைக்கு நாள் குறைவாயிருக்கு. ஸெலபஸ் கவராகணும்” என்று அதிகாரத் தோரணையோடு இரைந்து கூறி விட்டு அப்படிக் கூறிய சுவட்டோடேயே புன்னகையுடன், “வத்ஸலா? அவ கிட்டச் சொல்லு; நீ வராட்டா அவருக்குக் கிளாஸ் நடத்தவே பிடிக்கலியாம்னு சொல்லு” - என்று குரலைத் தணித்து விரல்களை அழுத்தாமல் சலனத்திலேயே இசைக்கும் ஒரு நுண்ணிய வாத்தியத்தை மீட்டுவது போல் மிருதுவாகச் சொல்லியனுப்பினான் சுந்தரராஜன்.

வத்ஸலா ஓடினாள்.

புஷ்பங்கள் எல்லையற்று மணந்தன. வேப்பமரங்களில் மெல்லிய இலையசைவில் காற்றுச் சலசலத்தது. தொலைவில் சாம்பல் பூத்த நீல நிறத்தில் மலைகள் தெரிந்தன. பள்ளியில் மத்தியான வகுப்புக்களுக்கு ஆரம்ப மணி அடித்தது.

(தாமரை, ஜூலை, 1967)