பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு மணிவிழாக் கதை

759

அந்த வேளையாகப் பார்த்து இவரைத் தேடி வந்து சேர்ந்தான் அன்பரசன். அன்பரசன் நகரத்தின் பொது வாழ்வில் ஒரு பிரமுகன். பாராட்டு விழாவும், மணி விழாவும், பொன் விழாவும் நடத்தி அறிஞர் பெருமக்களின் ஆவலை நிறைவேற்றுவதே அவன் வாழ்வின் குறிக்கோள். அன்பரசன் ‘மணிவிழா அண்ட் பொன்னாடை பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர்’ என்று கூடச் சிலர் இதைக் கேலியாகக் கூறுவதுண்டு. அதைப் பற்றியெல்லாம் நம் அன்பரசன் கவலைப்பட்டதே கிடையாது. பொது வாழ்வில் நாலு பேர் நாலுவிதமாகச் சொல்வார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று அவனுக்குத் தெரியும். ஒரு பெரிய மனிதரை அன்பரசன் தேடி வருகிறான் என்றாலே, அவருக்கு மணி விழாவோ, பொன் விழாவோ கொண்டாட வேண்டிய வயது வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

“என்னண்ணா! இந்த நன்றி கெட்ட தமிழகத்தைப் பார்த்தீர்களா? எழுபதாண்டுகள் உழைத்து உழைத்துத் தேய்ந்த உங்களுக்கு உருப்படியாய் ஒரு பாராட்டுக் கூடச் செய்யாமல் விட்டு விட்டார்களே!” என்று வேங்கடநாதனிடம் வாயைக் கிளறினான் அன்பரசன் - இன்னாரிடம் இப்படி இப்படித்தான் பேச்சைத் தொடங்க வேண்டும் என்று அன்பரசனுக்கு அத்துப்படி…

“விட்டுத் தள்ளுங்க. இங்கே இப்படி மறப்பது சகஜம்” என்று அலுத்துக் கொண்டார் வேங்கடநாதன்.

“நீங்க விட்டு விடலாம், அண்ணா! ஆனா என்னைப் போலொத்தவங்க அப்படி விட்டுவிட முடியாது!”

“முடியாட்டா. என்னதான் செய்யனுங்கறீங்க?”

“இன்னும் ஒரு வாரத்திலே ஒரு கமிட்டி செட்-அப் பண்றேன்... பாருங்க…”

“பண்ணி…?”

“அதை இப்பவே சொல்வானேன்? போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.”

“ஆகா! உங்க நல்லெண்ணத்தை எப்படிப் பாராட்டுறது? கடவுள்தான் உங்களுக்கு நல்லது செய்யத் துணை நிக்கணும்.” என்று தம்மையும் மறந்து உருக்கமாகப் பேசினார் வேங்கடநாதன். முதலில் பிகு செய்வது போல் பேசத் தொடங்கியவர் கடைசியில் அன்பரசனிடம் வழிக்கு வந்து விட்டார். அதிகமாகப் பிகு செய்து கொண்டால் எங்கே அன்பரசன் விட்டுவிட்டுப் போய் விடுவானோ என்ற பயம் அவருக்கே வந்து விட்டது.

“அதிலே பாருங்க, மிஸ்டர் அன்பரசன்! இன்னிக்கி இந்த ஊரிலே டெய்லி பேப்பர்லே இருக்கற அத்தனை ஸீனியர் ஜெர்னலிஸ்டுகளும் ‘ஜெர்னலிஸம்’னா என்னங்கறதையே எங்கிட்டத்தான் படிச்சுக்கிட்டாங்க.”

“எனக்குத் தெரியாதுங்களா? உங்க செர்வீஸ் என்ன? அனுபவம் என்ன? ‘வெடெரன்’ ஆச்சுங்களே..?” என்று துதி பாடினான் அன்பரசன். அவ்வளவுதான்! வேங்கடநாதன் சரியாக வலையில் விழத் தொடங்கினார்.