பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு மணிவிழாக் கதை

761

அன்பரசன் விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தான். ஒரு வாரம் கழித்துப் பத்திரிகைகளில் எல்லாம் சிறியதாக ஏழாம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் அடியோரத்தில் ‘வேங்கடநாதன் மணிவிழா’வுக்குச் செயற்குழு அமைக்கப்பட்டு அன்பரசன் அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி பிரசுரிக்கப் பட்டிருந்தது. அந்தச் செய்தியின் கட்டிங்குகளை வேங்கடநாதனுக்கு அனுப்பி வைத்தான் அன்பரசன்.

“பல இடங்களுக்கு மணிவிழா விஷயமாக அலைந்து கொண்டிருப்பதனால் நேரில் வர இயலாததற்கு மன்னிக்கவும்” என்று கூடவே ஒரு கடிதத்தில் அவரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தான் அவன். அதன் பின் இரண்டு மாதம் வரை ஒரு தகவலும் இல்லை. மூன்றாவது மாதம் முதல் வாரம் அன்பரசனிடமிருந்து வேங்கடநாதனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பரசன் எழுதியிருந்தான் :

“தவறாக நினைக்காமல் உடன் உதவ வேண்டுகிறேன். மணிவிழா வசூல்களுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். சுமார் ஐம்பதினாயிரமாவது தேற்றி விட வேண்டும் என்று எங்களுடைய குழு விரும்புகிறது. ஆரம்பச் செலவுகளால் வசூல் தடைப்படக் கூடாது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். எனவே, வசூல் செலவுகளுக்காக மேலும் ஓர் இருநூறு ரூபாய் அனுப்புமாறு வேண்டுகிறேன். பின்னால் வசூலில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு,
மு. அன்பரசன்
செயலாளர் - மணிவிழா”

இருநூறு ரூபாயை அனுப்பா விட்டால் ஐம்பதினாயிரம் ரூபாயை இழக்க நேரிட்டு விடுமோ என்ற அச்சத்தினால், உடனே இருநூறு ரூபாய்க்கு ஒரு ‘டிராப்ட்’ எடுத்து அன்பரசனுக்கு அனுப்பி வைத்தார் வேங்கடநாதன்.

வருடம் ஒன்று கடந்து விட்டது. அதற்குள் நாட்டில் பல மாறுதல்கள் - தேர்தல், மந்திரி சபை மாற்றம், விலைவாசிகள், மொழிப் பிரச்னை, மழையின்மையால் பஞ்சம், மழையினால் வேதனை, எல்லாம் வந்திருந்தன.

வேங்கடநாதன் மணிவிழாவின் குழு சுகமாக நித்திரை புரிந்து கொண்டிருந்தது. ஒரு செய்தியுமில்லை. வசூல் என்ன ஆயிற்று? எங்கெங்கே ஆயிற்று? இன்னும் எங்கெங்கே ஆக வேண்டும்? எப்போது மணி விழா நடைபெறும்? ஒரு விவரமும் தெரியவில்லை. நடுவில் ஒருமுறை வெள்ளி விழா எழுத்தாளர் வேங்கடநாதன் அன்பரசனுக்கு ‘நாசூக்காக’ ஒரு கடிதம் எழுதினார். -

“தங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டியிருப்பதால் தயவு செய்து நாளை மாலை என் இல்லத்திற்கு வருமாறு உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள,
வேங்கடநாதன்.”