பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

762

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அதற்கும் பதில் இல்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து அன்பரசனே போனில் பேசினான்.

“தப்பா நினைச்சுக்காதீங்க ஐயா! மதுரை வசூல் அவ்வளவு திருப்தியா இல்லே. மதுரையிலே பத்தாயிரம் டார்ஜெட். ஆனா, ஏழாயிரம்தான் முடிஞ்சுது. நாளைக்குத் கோயம்புத் தூர் புறப்படறோம். கோயம்புத் தூர்லே ஒரு பதினையாயிரம் எதிர்பார்க்கிறோம். அநேகமா முடியும்னு தோணறது. இன்னிக்கு ஸாட்டர்டே அதனாலே மத்தியானம் 12 மணியோட பாங்க் சரியாயிடும். நாங்களோ நாளைக் காலையிலே கோயம்புத்தூர்லே இருக்கணும். இன்னிக்கி ராத்திரி ரயில்லே புறப்படணும் பாங்க்லே பணம் எடுக்கற நேரம் தள்ளிப் போச்சு. தப்பா நினைக்காமே, ஒரு நூறு ரூபா கொடுத்தனுப்பிச்சிங்கன்னா கோயம்புத்தூர் வசூலுக்குக் குறித்த நாளையிலே போய் வந்துடலாம்! எல்லாம் பின்னாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”

“முன்னாலேயே ஒரு தடவை இருநூறு, இன்னொரு தடவை முந்நூறுன்னு ஐநூறு வரை கொடுத்திருக்கேனே...? இப்ப வேறே?”

“அதெல்லாம் நீட்டா அக்கவுண்ட் எழுதி வச்சிருக்கேன். இப்ப நீங்க கொடுத்தனுப்பற ஹண்ட்ரடோட உங்க வசமிருந்து மொத்தம் ஸிக்ஸ் ஹண்ட்ரட் ஆகிறது. அதை நாங்க பின்னாலே ‘அட்ஜஸ்ட்’ பண்ணிடறோம்.” -

“எங்கே கொடுத்தனுப்பணும், இப்ப?”

“என் வீட்டுக்கு அனுப்புங்க போதும்.”

வேங்கடநாதன் ஓர் ஆள் வசம் அன்பரசனின் வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்தனுப்பினார்.

மேலும் ஆறு மாதம் கடந்து விட்டது. வேங்கடநாதன் மணிவிழாக் குழு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. வேங்கடநாதனும் கேட்பதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டும், வேதனையோடும் சும்மா இருந்தார்.

கடைசியில் ஒருநாள் பொறுமையிழந்து கோபமாக அன்பரசனுக்கு ஒரு கடிதம் எழுதினார். - - -

பம்பாய் - கல்கத்தா - டில்லி ஆகிய வடஇந்திய நகரங்களில் உள்ள தமிழன்பர்களிடம் வசூல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மறுமொழி வந்தது.

மேலும் ஒரு வருடம் ஓடி விட்டது. மணிவிழா நடைபெற்றுப் பணம் கைக்கு வந்து சேருவதற்குள் தாம் இறந்து போய் விடக் கூடாதே என்று வேங்கடநாதனே கவலையும், பயமும் கொள்ளத் தொடங்கி விட்டார். அன்பரசன் தட்டுப்படவே இல்லை. மதுரை வசூல், கோவை வசூல், பம்பாய், டில்லி, கல்கத்தா வசூல் எல்லாம் என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை.

வெள்ளி விழா எழுத்தாளர் வேங்கடநாதனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடியே அவரே அன்பரசனைத் தேடிப் புறப்பட்டார்.