பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

765

திவான் பகதூருக்கு அவளுடைய மறுமொழிகளினால் சமாதானம் ஏற்பட்டு விட்டது என்று கூறுவதற்கில்லையானாலும், மனத்தின் பாரத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொண்டோம் என்ற அமைதி கிடைத்தது. கோடி கோடியாக முதல் போட்டு மாபெரும் தொழில்களை நடத்தும் ஒரு பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட் தம் வாரிசாக எதிர்பார்த்து வளர்க்கும் ஒரு பையன் கொஞ்சங்கூட அந்த வழியில் வரவில்லை என்பது அவருக்கு ஏமாற்றத்தையும், பயத்தையும் அளித்தது. பங்களா காம்பவுண்டில் அவன் படிப்பதற்கென்று ஒதுக்கி விட்டிருந்த அறையில் எகனாமிக் அட்வைஸர், பிஸினஸ் வீக்லி, கமர்ஷியல் டைம்ஸ் என்று தொழிலுக்கு உதவும் பத்திரிகைகளை வாங்கிக் குவித்திருந்தார் அவர். புத்தகங்களையும் வாங்கி அடுக்கியிருந்தார். மாகாணத்திலேயே அந்தத் துறையில் தேர்ச்சி மிக்க பேராசிரியர் ஒருவரைக் கொண்டு டியூஷனுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். பட்டம் வாங்கியதும், வெளிநாட்டுப் படிப்புக்கு அனுப்பவும் ஏற்பாடாகியிருந்தது.

பெண் நாச்சியாருக்கு எவ்வளவோ தேடித் தேடி வரன் பார்த்துப் பெரிய தொழிலதிபரின் ஒரே மகனுக்குக் கொடுத்தார். அவளுடைய கணவன் விமான விபத்தில் வெளிநாட்டில் மாண்டான். ஒரு மகனோடு வாழாவெட்டியாகத் தந்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மகள். பேரனைக் குழந்தைப் பருவத்திலேயே தம் பொறுப்பில் வளர்க்கத் தொடங்கியும் அவனை அவர் நினைத்தபடி உருவாக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் டியூஷன் வாத்தியார் ஒரு விஷயத்தைத் திவான் பகதூரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அப்போதே நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டது.

“ஒண்ணுமில்லை, சாதாரண விஷயந்தான். நான் ஏதோ புரொடக்ஷன், கன்ஸம்ப்ஷன்னு பாடம் ஆரம்பிச்சா உங்க பேரப்பிள்ளையாண்டான், ‘ஸார் ஸார்! நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். படிச்சுக் காட்டட்டுமா?’ன்னான். ‘சரி! படி’ன்னேன். ‘ரோஜாப்பூ ஏன் சிவப்பாயிருக்கிறது?’ன்னு கவிதைக்குத் தலைப்பாம். தலைமுறை தலைமுறையாக உழைக்கிறவங்க ரத்தம் எல்லாம் பூமிக்குள்ளே பாய்ந்து தேங்கிக் காய்ந்து போயிருக்கிறதனாலே தான் ரோஜாப்பூச் சிவப்பாப் பூக்கிறதுன்னு பாட்டு எழுதியிருக்கான்” என்று சொல்லிக் கொண்டே ஒரு துண்டுக் கடிதத்தைப் பெரியவரிடம் எடுத்து நீட்டினார் டியூஷன் வாத்தியார். -

பெரியவர் அதை வாங்கிக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு படிக்கத் தொடங்கினார் :

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆடி அயர்ந்தே இருகரமும்
ஓய உழைப்பார் உழைப்பெல்லாம்
உதிரம் பெருக்கிப் பரந்தபின்னே
காயும் நிலத்துள் கரந்தந்தக்
கைகள் உழைத்த காந்தியினால்
பூவாய்ப் பூத்து மலர்ந்ததுவே
புத்தம் புதிய ரோஜாவாம்.”