பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

767


பெருமிதமும், செல்லப்பாவுக்கு உறைக்க வேண்டும் என்பதற்காக ‘ஸ்டூடன்ஸ் கன்ஸெஷன்’ டிக்கட் வசதி இருந்தும், விமானத்தில் முதல் வகுப்பில் அவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தார் பெரியவர்.

அவனுக்குள் வியாபார உலகின் நுணுக்கங்களே இல்லை. அவன் போக்கே புதுமையாக இருந்தது பெரியவருக்கு. அவுட் ஹவுஸில் அவன் படிப்பதற்காக விட்டிருந்த கீழ்ப்பகுதி அறையின் முன்னால் பூந்தொட்டிகளில் புதிய புதிய பூக்கள் பூக்கும் போதெல்லாம் அவன் சிறு குழந்தை போல் அதைக் கொண்டாடினான். மேற்கே சாயங்கால மேகம் ரோஜாப் பந்துகளாகச் சுருண்டிருப்பதை மொட்டை மாடியில் நின்று பருகுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் செல்லப்பா. இந்த நிலையில் அவனை அடிக்கடி பார்த்திருந்தார் பெரியவர்.

“இந்த மாதிரிப் புத்தகம்லாம் இனிமே வாங்காதே செல்லப்பா! பேரே கேக்க அசிங்கமா இருக்கு ‘வர்ஜின்ஸ் அண்ட் வைன்யார்ட்ஸ்’ இதெல்லாம் உனக்கு எதுக்கு” என்று ஒரு நாள் பேரனைக் கண்டித்துப் பார்த்தார் திவான் பகதூர். பேரன் அவரை விடவில்லை.

“பேர்லே என்ன இருக்கு தாத்தா? ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா எழுதினது இது. இன்னிக்கி இந்தியாவிலேயே சிறந்த கவி அவர்தான். அவரோட முதல் புத்தகத்துக்கு யோகி அரவிந்தரே பாராட்டுக் கொடுத்திருக்கிறார்” என்று பேரன் தாத்தாவிடம் விவாதத்துக்கே வந்து விட்டான்.

ஒரு முறை ஆல் இண்டியா மானுபாக்சரர்ஸ் அஸோஸியேஷன் கூட்டம் ஒன்றுக்காக டில்லி போன போது அவனையும் விமானத்தில் அழைத்துப் போயிருந்தார் அவர். அவனுக்கு அப்போது கல்லூரி விடுமுறையாக இருந்ததனால், தம் வழியைப் பழக்கி விட்டு விடலாம் என்று எண்ணித்தான் அவர் அவனை அழைத்துச் சென்றிருந்தார். அவனோ, அவரோடு சுற்றுவதில் சலிப்படைந்து, டில்லியிலிருந்து தாஜ்மகால் போவதும், ஹரித்துவார் போவதும், திரும்பி வந்து அவற்றை ஒரு குழந்தையின் வியப்போடு கிழவரிடமே வருணிப்பதுமாக இருந்தான். ஒரு தேர்ந்த வியாபாரியின் திறனோடு அவனை உரையாடப் பழக்க வேண்டும் என்று, “திஸ் இஸ் தி ஸிட்டி ஆஃப் வி. ஐ. பிஸ் அண்ட் டிப்ளமேட்ஸ், யூ மஸ்ட் லேர்ன் திங்க்ஸ் ஃப்ரம் அதர்ஸ்” என்று டில்லியைப் பற்றி அவர் ஆரம்பித்தால், “என்ன தாத்தா நீங்கள்?” என்று பதிலுக்குத் தமிழில் ஆரம்பித்தான் அவன். “பல மொழிகளில் சாமர்த்தியம் காட்ட முடியாமைக்குக் காரணம் ஒரு கவி மனப்பான்மையினாலும், ஒரு சிறிதும் ‘லிங்க்விஸ்டிக்’ ஆக இருக்க முடியாமைதான்” என்று டியூஷன் வாத்தியார் அதற்குப் பின்னால் எப்போதோ கிழவரிடம் இது பற்றி விளக்கம் கூறினார்.

செல்லப்பா சில பத்திரிகைகளில் கவிதை எழுதி அச்சில் வெளிவருவதாகவும் டியூஷன் வாத்தியார் மூலம் அவர் கேள்வியுற்றிருந்தார். மிகவும் கடுமையாக அவனை எப்படிக் கண்டிப்பதென்று அவருக்கு விளங்கவில்லை. பாசமும் தடுத்தது.