பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

768

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சிலசமயங்களில் காரில் அவனை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது போகும் போது “ஸீரியஸ்லி ஐயாம் டெல்லிங் திஸ், யூ மஸ்ட் பிகம் ஏ பிஸினஸ் மேக்னட்! டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்” என்று அவனிடம் ஆரம்பித்திருக்கிறார் அவர். அதையும் அவன் சிரித்து மழுப்பிக் கொண்டே கேட்டிருக்கிறானே ஒழிய, ஸீரியஸ்ஸாகக் கேட்டதில்லை. ஒரு நாள் இப்படி அவர் ஏதோ கண்டிக்க முற்பட்ட போது, “தாத்தா, போன தடவை பெங்களூர் போனப்ப நாம் தங்கியிருந்த வீட்டிலே மாடி ஜன்னலோரமா, ஒரு சண்பக மரம் பூத்திருந்ததே. அது ரொம்ப நல்லா இருந்திச்சு. விடிய காலம்பர அறை முழுவதும் சண்பக வாசனை நிரம்பியிருந்திச்சு. அது மாதிரி ஒரு சண்பக மரம் அதே சாதிச் செடி கொண்டாந்து என் அவுட்ஹவுஸ் கிட்ட தோட்டத்திலே வைக்கணும். என்ன சொல்றீங்க?” என்று சம்பந்தமில்லாமல் அவன் பதிலுக்கு அவரைக் கேட்டான். அவருக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. பெங்களூரிலிருந்து ஒரு நர்ஸரி மூலம் சண்பகச் செடி வரவழைத்து, நட ஏற்பாடு செய்தார். பேரனை மனம் புண்படச் செய்யவும் அவருக்குத் துணிவில்லை. சண்பக மரம் பெரிதாகி வளர்ந்து, தன் அறை ஜன்னலருகில் பூத்து மணம் பரப்புவதைப் பற்றி அவன் ஒருநாள் டியூஷன் வாத்தியாரிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

மேற்படிப்புக்காக அவன் லண்டனுக்குப் புறப்படு முன் அம்மாவுக்கு இரகசியமாகச் சொல்லி விட்டுப் போன செய்தி, “தோட்டக்காரன் மறந்துடப் போறான், நீ தினம் சொல்லி அந்தச் சண்பகச் செடிக்குத் தண்ணி ஊத்தணும்! தாத்தாக் கிட்டச் சொன்னா சண்டைக்கு வருவாரு” என்பதுதான். அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது இதைக் கேட்டு.

“அத்தினி தூரம் சமுத்திரத்தைத் தாண்டிப் போறவன் ரொம்ப முக்கியமான சங்கதிதான் சொல்லிட்டுப் போறே, இதை வேற யாராவது கேட்டாச் சிரிப்பாங்க. போடா போ” என்று அவனுடைய தாய் அவனைக் கேலி செய்தாள்.

“எரையாதே! தாத்தா காதிலே விழுந்திடப் போகுது. ப்ளேனுக்குப் புறப்படற சமயத்திலே கோபிச்சுக்கப் போறாரு” என்று சொல்லிச் சிரித்தான் செல்லப்பா.

அவள் பதில் சொல்லவில்லை. திவான் பகதூர் பம்பாய் வரையில் போய் அவனை வழியனுப்பி வந்தார்.

“லண்டன்லே போனதுமே, ராபர்ட்ஸனைப் பாரு, அவரு சொல்றபடி எல்லாம் செய். நடுவே பத்து நாள் பன்னிரண்டு நாள் லீவு வர போது மத்த நாடுகளைப் பாரு. ஸ்விஸ்சர்லாந்து, ரோம், ஜெனிவா, ப்ராங்க்பர்ட் எல்லாத்தையும் வியாபார நோக்கத்தோடே பாரு. ராபர்ட்ஸன் எல்லா உதவியும் பண்ணுவாரு. பணம் தேவையானப்ப எழுது, பீகாம் தான் இப்பிடிப் போச்சு அங்கேயாவது டிஸ்டிங்ஷன் வாங்கணும்” என்றெல்லாம் படித்துப் படித்துச் சொல்லிப் பம்பாயில் அவனை வழியனுப்பி வைத்தார் திவான்பகதூர். பலமுறை போய் வந்த போது தமக்குப் பழக்கமாகியிருந்த லண்டன் நண்பர்களுக்குக் கடிதம் வேறு கொடுத்திருந்தார் அவனிடம்.