பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

769

“இங்கிலாந்திலிருந்து இங்கிலீஷ் சானல் வழியாகவும், பிரான்ஸ் போகலாம். ஆனால் நீ ப்ளேன்லேயே போய்ப் பாரு, லண்டன் டு பிரான்ஸ் ‘ஏர் ஃப்ரான்ஸில்’ ஜெட் ப்ளைட் நாற்பது நிமிஷந்தான். இங்கிலீஷ் சானல் வழியாப் ‘போட்’லே போய்ச் சிரமப்படாதே” கிழவர் தொணதொணவென்று கூறித் தீர்ந்திருந்தார். செல்லப்பன் சிரித்தபடியே கேட்டான். பிரியப் போகிற நேரத்துப் பாசமும், பிரியமும் அவன் மனத்தைப் பிசைந்தன.

விமானம் புறப்பட்டதும் தாத்தாவைப் பிரிவதையும், பாசத்தையும் அவன் மிக அதிகமாக உணர்ந்தான். சொந்த மண், சொந்த மனிதர்கள், பாசம் எல்லாம் எப்படி இரத்தத்தோடு இரத்தமாக, உணர்வோடு உணர்வாக ஒன்றியவை என்பதை அவன் அப்போது உணர்ந்தது போல் அதற்கு முன் எப்போதும் உணர்ந்ததில்லை எனலாம்.

லண்டனிலிருந்து அவன் அவருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் லேக் டிஸ்டிரிக்ட்டுக்குப் போய்க் கவி வேர்ட்ஸ்வொர்த் பிறந்து வாழ்ந்த பகுதியைப் பார்த்து விட்டு வந்ததை வியந்து வர்ணித்து எழுதியிருந்தான். தாத்தாவுக்கு மறுபடி கவலை பிறந்தது. மகள் நாச்சியாரிடம் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

“படிக்கப்போன இடத்திலேயும் இவன் மாறலை. என்னதான் ஆகப் போகுதோ!” என்று வருத்தப்பட்டுக் கொண்டார். பையனைக் கவனித்துக் கொள்ளும்படி நண்பர் ராபர்ட்ஸனுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதிப் போட்டார்.

ராபர்ட்ஸன் அவருக்கு எழுதிய பதிலில், “ஹி ஹாஸ் காட் எ ரேர் பொயடிக் டாலென்ட். டோன்ட் ஸஸ்பெக்ட் ஹிம்’ என்று எழுதவே, ராபர்ட்ஸன் மேலும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. உலகமே தமக்கு எதிராகத் தம் பேரனைக் கெடுக்கச் சதி செய்வது போல் தோன்றியது.

ஆறு மாதம் கழித்து ஒரு கிறிஸ்துமஸ் லீவில் ஸ்விஸ்சர்லாந்து போய் அங்கிருந்து ஸ்விஸ் மலைகள், ஏரிகளின் அழகைக் கவிதையில் வருணித்து ஒரு தமிழ்க் கடிதம் அவருக்கு எழுதியிருந்தான் பேரன். முன்பு செய்தது போல் என்ன காரணத்தினாலோ, அந்தக் கவிதையைக் கிழித்துக் கசக்கி எறிய மனம் வரவில்லை அவருக்கு.

“பளிங்கிற் பதித்த நீர்நிலைகள் - இளம்
பச்சை மரகதப் புல்வெளிகள்”

என்று ஆரம்பமான அந்தக் கவிதையை அவரால் வெறுக்கவும் முடியவில்லை. பேரனின் இந்தப் போக்கை விரும்பவும் முடியவில்லை. படிப்பைக் கவனிக்குமாறு கடிதம் எழுதிக் கண்டித்தார். ‘அவன் குடிக்கிறான், கண்டபடி அலைகிறான்” என்றெல்லாம் கேள்வியுற்றிருந்தால் கூட அவருக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்காது. அப்படி எல்லாம் செய்தால் கூட அவன் தேர்ந்த வியாபாரியாக மாறி விட முடியும் என்று நம்பினார். ஒருவன் பிறரிடம் மறைக்கப் பழகும் இரகசிய உணர்வு அடைந்தாலே, அந்த அளவு வியாபாரியாகி விடுகிறான் என்பது அவருடைய நம்பிக்கை. பேரப் பிள்ளையாண்டான் அப்படியும் இல்லையே என்பதுதான் அவருடைய வருத்தமாக இருந்தது. கவலைப்படும் ஒவ்வொரு சமயமும் நண்பர்
நா.பா. 11 - 10