பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

772

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பாலன்ஸ் ஷீட், போனஸ், இன்ஸென்டிவ், போனஸ் என்றெல்லாம் நினைக்க வைத்து, மனம் வறளச் செய்வது அவனுக்குச் செய்யும் நன்மையாக முடியுமா? என்று அவர் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது.

ஒரு பூவை நெருப்பில் எடுத்துப் போடுவதா, கூடாதா என்பது போன்ற தயக்கமாக இருந்தது அது. அதே சமயம் அவன் பாடிய பழைய ரோஜாப்பூ கவிதையை நினைத்த போது அவன் மேல் கடுங்கோபமும் மூண்டது. அது ஏதோ ஒரு புரட்சிக்காரனுடைய சிந்தனை மாதிரி தோன்றி அவரை மிரட்டியது. எதிர்காலத்தில் தம்முடைய தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் ஒரு ‘டிப்பிகல் இன்டஸ்டிரியலிஸ்ட்’ ஆக அவனை அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது பயனளிக்கவில்லை. தொழில்களும், தொழிலாளர்களும் போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் அவனால் அந்தப் பொறுப்பைத் தாங்க முடியும் என்று அவராலேயே நம்ப முடியவில்லை.

திவான் பகதூரின் இரண்டு கம்பெனிகளில் லாக் அவுட் ஆறு மாதத்துக்கு மேல் நீடிக்கலாயிற்று. ஒரு கம்பெனியில் ஸ்டிரைக். இன்னொரு கம்பெனியில் மானேஜரைக் ‘கேராவ்’ செய்து கொடுமைப்படுத்தியதனால், ஆபீஸ் முழுவதும் போலீஸ்காரர் காவலுக்கு நின்றார்கள். மற்றொரு தொழிலகத்தில் ‘கோ ஸ்லோ’வினால் பொருளுற்பத்தி மிக மிகக் குறைந்தது. ஆறேழு மாதம் அவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. மானேஜர்களும், அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர்களும், அந்தரங்கக் காரியதரிசிகளும், தொழில் சம்பந்தமான பிரச்னைகளை அவரிடம் வீட்டிலேயே வந்து கலந்து ஆலோசித்துக் கொண்டு போனார்கள். நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகமாயின. அரசியல் சார்புடைய சுயநல நோக்கமுள்ள தொழிற்சங்க வாதிகள் நல்ல தொழிலாளர்களைக் கூடக் குழப்பமான பாதைகளுக்கு அழைத்துச் சென்றனர். இன்னொரு வருடமும் ஓடி விட்டது. நிலைமையில் எந்த வித மாறுதலும் இல்லை.

அடுத்த வெள்ளியன்று டிரான்ஸ்வோர்ல்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பம்பாய் வந்து, பம்பாயிலிருந்து செல்லப்பா சென்னை வருகிறான். பேரனை வரவேற்க விமான நிலையத்துக்குக் கூடப் போக முடியாத நிலையில் இருந்தார் திவான் பகதூர். டியூஷன் வாத்தியாரும், நாச்சியாரும், திவான் பகதூரின் கம்பெனி நிர்வாகிகளும் மீ னம்பாக்கம் போய்ப் பேரனை அழைத்து வந்தனர்.

செல்லப்பா வெளிநாட்டுச் சூழ்நிலையில் நன்றாக அழகாக வெளுத்திருந்தான். ஆளும் திடீரென்று மிகவும் உயர்ந்து விட்ட மாதிரித் தோற்றமளித்தான். தாத்தா படுக்கையிலிருந்து எழுந்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். ஆஜாதுபாகுவாகச் செழித்திருக்கும் பேரனைக் கண்டதும் அவருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி.

“ராபர்ட்ஸன் உங்களை விசாரித்தார்” என்றான் பேரன்.

“ஹெள இஸ் ஹி நெள? டிட் யூ ஹாவ் எ நைஸ் டிரிப்?” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் கிழவர். பேரன் தமிழிலேயே பதில் சொன்னான். வெளிநாட்டில் நாவுக்கு