பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

773

ருசியாகச் சாப்பிட முடியாமல் இரண்டு வருடத்தைக் கழித்து விட்டு வந்திருக்கும் பிள்ளைக்கு, வாய்க்கு ருசியாகச் சாப்பாடு போட அழைத்துக் கொண்டு போனாள் நாச்சியார். மற்றவற்றையும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று கிழவரும் பேரனை டைனிங் டேபிளுக்கு அனுப்பி வைத்தார். கம்பெனி அதிகாரிகள் தொழில் நிர்வாகத்தில் பேரனுக்கு என்ன என்ன பொறுப்புக்களை அளிப்பது என்பது பற்றிக் கலந்து பேசுவதற்காகக் கிழவரின் படுக்கையருகில் சூழ்ந்தார்கள்.

உள்ளே டைனிங் டேபிளில் திடீரென்று அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடப்பது தடித்த குரல்களில் கேட்கவே அது என்ன என்று அறிந்து கொள்வதற்காக மகளைக் கூப்பிட்டனுப்பினார் கிழவர். மகள் வந்தாள்.

“வந்ததும் வராததுமா அவங்கிட்ட என்ன சத்தம் போடறே நாச்சியார்?”

“அவனுக்கு வேற வேலை என்ன? ஊருக்குப் போற போது ஏதோ சண்பகச் செடி நட்டுட்டுப் போனானாம், அதுக்கு நான் தோட்டக்காரனிடம் சொல்லி ஒழுங்காத் தண்ணி விட்டுக் கவனிக்காததனாலே அது பட்டுப் போச்சாம். அதைப் பார்த்து அவனுக்கு மனசே சரியில்லையாம். சாப்பிடக் கூடப் பிடிக்கலையாம். கத்தறான், கூப்பாடு போடறான்.”

கிழவர் முகத்தில் புன்முறுவல் மலர்ந்தது.”எனக்கு உடம்பு கெட்டுப் போயி, நான் படுத்த படுக்கையா இருக்கறதைப் பத்திக் கூட அவன் கவலைப்படலை. சண்பகச் செடி பட்டுப் போனதைப் பத்தி மட்டும் எவ்வளவு உருகறான் பாத்தியா நாச்சியாரு?”

“ஆமா அசட்டுப்பிள்ளை, ஒண்ணுமே தெரியலே.”

கிழவர் தம்மைச் சுற்றியிருந்த அதிகாரிகளிடம், “எக்ஸ்க்யூஸ் மி ஃப்ரண்ட்ஸ் ஹி இஸ் டூ யங், டூ டெண்டர் டு டேக் சார்ஜஸ் இன் தி ஆபீஸ், லீவ் ஹிம் நெள” என்று கூறினார். அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். அவர் மனத்தில் பாரம் அகன்றாற் போலிருந்தது.

அன்று அவருக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமாகவில்லை.போன இடங்களைப் பார்த்த நாடுகளை, சந்தித்த மனிதர்களைப் பற்றி எல்லாம் பேரன் கவித்துவம் பொங்கச் சொல்லியவற்றை அவர் அமைதியாக ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.


(கலைமகள், தீபாவளி மலர், 1968)