பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / கிழிசல் * 775

"வேறே என்னதான் செய்கிறது?”

“இந்தச் சந்து வழியாகப் போயிடறதாயிருந்தால் இவ்வளவு யோசனை பண்ண வேண்டாம். நீர்தான் ஒரேயடியா நடுங்குகிறீரே.”

“நடுங்குகிறேனோ நடுங்கவில்லையோ, வரமுடியாதென்றால் வர முடியாது. உமக்கு அவசரமானால் நீர் தாராளமாகச் சந்து வழியே போகலாம். நான் இரண்டு மைல் நடந்தாவது போய்க் கொள்வேன்...”

“அட! நீரொண்ணு... நெருப்பைப் பார்த்தாக்கூடவா சுட்டுடும்? என்னமோ பெரிசாக் கதைக்கிறீரே!”

“பனைமரத்துக்குக் கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுதான்...”

“ஏதேது! பெரிய பீஷ்மராட்டமாப் பேறீரே.”

“சார்! இந்தாங்க. உங்களுக்கும் உங்க மோட்டார் சைக்கிளுக்கும் ஒரு பெரிய நமஸ்காரம் என்னைத் தயவு செய்து விட்டுடுங்க”

நண்பர் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். "சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! வாரும், உம் இஷ்டப்படியே மெயின்ரோடு வழியாகத் திரும்பிப் போகலாம்” என்று அவரைச் சமாதானப்படுத்திச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்.

மெயின்ரோடும், கடற்கரைக்குப் போகும் வழியும் சந்திக்கின்ற இடத்திற்குச் சென்ற போது, நண்பர் திடீரென்று திட்டத்தை மாற்றினார். “சார் இப்ப உடனே வீட்டுக்குப் போய்த் தான் என்ன செய்யப் போகிறோம்? பீச்சிலே போய்க் கொஞ்ச நேரம் நிம்மதியாக் காத்து வாங்கிட்டுப் போகலாமே!”

"ஒ எஸ். அப்படியே செய்தால் போச்சு நான் மோட்டார் சைக்கிளைக் கடற்கரைக்குப் போகும் வழியில் திருப்பினேன்.

கடற்கரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குட்டிகளுமாக ஒரே கூட்டம் ஒரு கடல் முடிகிற இடத்தில் இன்னொரு கடல் ஆரம்பமாவது போல் தோன்றியது, அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது.

மணலில் வெகுதுரம் நடந்து சென்று, ஒதுக்குப்புறமாகக் கூட்டமில்லாத இடத்தில் உட்கார்ந்தோம். நண்பர் எதையோ சிந்தித்துக் கொண்டே என்னோடு உட்கார்ந்திருக்கிறார் என்று அவர் முகத்திலிருந்து அனுமானிக்க முடிந்தது. ‘கேட்டுவிடலாமா?’ என்று எண்ணினேன். ஆனால் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் கடலைப் பார்க்கத் தொடங்கினேன். அவரும் கடலைப் பார்த்தார். புறக்கண்கள் தான் கடலைப் பார்த்தனவே ஒழிய அகக்கண்கள் உள்முகமாக ஆழ்ந்து எதையோ துழாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது.

இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளாமலேயே கால் மணி நேரம் கழிந்துவிட்டது. திடீரென்று நண்பர் வாயைத் திறந்தார். அவர் அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த பிரச்னை வெளிவந்து விட்டது.