பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

776 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“சார்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? ஒழுங்கீனத்தையே உல்லாசம், நினைக்கும் ஒருவகைப் பெண்மை சமூகத்தில் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?, யாருடைய அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்க முடியும்?

"நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்? உங்கள் கேள்வி எனக்குத் தெளிவாக விளங்கு வில்லையே?’ நான் வேண்டுமென்றே அவர் கேட்பது இன்னதென்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார் அவர் ஒரு நிமிஷம் அந்தப் பார்வை அப்படியே நிலைத்தது. கொஞ்சம் தயங்குவதுபோல் தெரிந்தது. “இல்லை!. கற்பும் ஒழுக்கமுமே இரண்டு கண்களாக விளங்கும் நமது நாட்டுப் பெண் சமூகத்தில் இந்த மாதிரி வரம்பற்ற வகை ஒன்று ஏற்படக் காரணமென்ன என்று கேட்கிறேன்?”

நண்பர் துணிவை வரவழைத்துக் கொண்டு நேரடியாகவே என்னைக் கேட்டார்.

“இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டுமென்ற எண்ணம் உங்கள் மனத்தில் எப்போதிருந்து உண்டாயிற்று?” நான் அவரைச் சரியானபடி மடக்கினேன்.

"ஏன்? இப்போதுதான்! சிறிது நேரமாக இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.”

"அப்படியானால் அந்தச் சந்து முனையில் நமக்குள் நடந்த விவாதத்தை நீர் இன்னும் மறக்கவில்லை. இல்லையா?”

"ஆமாம்! அதற்கென்ன?”

“ஒன்றுமில்லை! சும்மாக் கேட்டேன்'’ நான் மெல்லச் சிரித்துக் கொண்டேன். அதை எப்படியோ நண்பர் பார்த்து விட்டார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்? நான் கேட்டதில் என்ன தப்பு?”

'தப்பாவது, ஒன்றாவது? அதெல்லாமில்லை. அந்தப் பிரச்சனை உம்முடைய மனத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதென்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.”

"அது சரி! நீங்கள் இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே?’

"சொல்கிறேன்! தோட்டித்துக்கு வேலி போடுகிறார்கள். ஆனால், வேலிக்கு என்ன பாதுகாப்பு? வேலி இருப்பதனால் தானே தோட்டம் அடைய வேண்டிய துன்பங்களையும், அழிவுகளையும் அது அடையாமல், தானே தாங்கிக் கொள்கிற அளவிற்கு வேலி பயன்படுகிறது?”

"ஊம்! அப்புறம்?.”

"இந்த மாதிரிப் பரத்தையர் கூட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல மனிதகுலத்தில் பெண்களின் பிரவேசம் என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து பரத்தைமையும் இருக்கிறது!”