பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / கிழிசல் * 777

“பொய்! சுத்தப் பொய்! இந்தச் சமூகம் ஒரு சிலரை வேண்டுமென்றே குட்டிச்சுவராக்கிவிட்டது. ராஜாக்களும், பிரபுக்களும், கோவில்களுமாகச் சேர்ந்து பணக்கொழுப்பினாலும், பக்திக் கொழுப்பினாலும் பரத்தைமையை வளர்த்துவிட்டார்கள்.”

“சார்! நீங்கள் ஆவேசமாகப் பேசுகிறீர்கள். கொஞ்சம் உண்மையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் குற்றத்தை ராஜாக்களின் மேலும் மதத்தின் மேலும் சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும், அவ்வளவேன்? நீரும் நானும் உட்பட, இந்தச் சமூகம் முழுவதும் இது விஷயத்தில் குற்றவாளி தான்! யாருமே தப்ப முடியாது!”

“உம்மை வேண்டுமானால் குற்றவாளி என்று சொல்லிக் கொள்ளும் என்னைச் சொல்லாதீர். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!” அவர் கோபமடைந்து மறுத்துப் பேசினார். அவர் தம்மைக் குற்றவாளியாக்குவதை விரும்பவில்லை. நான் மேலும் விவாதத்தை வளர்த்தேன்.

"நான் கேட்கிற கேள்விகளுக்குக் கொஞ்சம் நிதானத்தோடு பொறுமையாகப் பதில் சொல்வீரா?”

“என்ன? கேளுமே சொல்கிறேன்."

"தோட்டத்துக்கு இருக்கிற கட்டுக்காவல், பாதுகாப்பு எல்லாம் அதைக் காக்கிற வேலிக்கு மட்டும் ஏன் இருப்பதில்லை?”

“பாதுகாப்பை உண்டாக்கும் வஸ்து எதுவோ அதற்குப் பாதுகாப்பு தேவை இல்லை!. பாங்கு கட்டிடத்திற்குக் காவலாக நைட் வாட்ச்மேன் (இரவுக் காவல்காரன்) போடுகிறார்கள். அவனுக்குக் காவலாக இன்னொரு காவல்காரனா போடுகிறார்கள்?” நண்பர் என் கேள்விக்குப்பதிலாக மற்றொரு கேள்வியையே கேட்டார். அது எனக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது.

“ஆல்ரைட் சரியான கேள்வி. சமூகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பெண்கள் வழி தவறாமல், அழிவடையாமல், கெடாமல் இருக்க வேண்டுமானால் இப்படிச் சிலர் வேலியாக அமைய வேண்டும். இல்லையானால் வேலிக்கு ஏற்படும் அழிவு தோட்டத்துக்கே ஏற்பட்டு விடும்!”

“தர்க்கரீதியாக இந்த முடிவு சரியாக இருக்கலாம். ஆனால் இது அநியாயம்! கொடுமை ஒரு சிலரை நிரந்தரமாகக் கெடுக்கும் சூழ்ச்சி?”

ஆவேசமாக என்னை எதிர்த்து முழங்கினார் அவர்.

ஃபயர் பெல்ட்' என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? காட்டிலாகாவில் வேலை பார்த்திருந்தால் தெரியும். காட்டிலுள்ள பயன்மிக்க நல்ல மரங்களில் தீப்பிடித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக ஒரு பயனுமில்லாத சில வெற்று மரங்களை அவற்றைச் சுற்றிப் பயிரிட்டிருப்பார்கள். தீப்பிடித்தாலும் அந்த வெற்று மரங்களோடு அழிவு நின்றுவிடும். மற்ற மரங்களில் பற்றாமல் அணைத்து விடுவார்கள்.