பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

778 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பரத்தையர்கள் இந்த மாதிரிச் சமூகத்திற்கு ஒரு ‘ஃபயர் பெல்ட்’ டாக இருந்து காத்து வருகிறார்கள்.”

“இப்படி முடிவு செய்வது நாகரிகமடைந்த சமூகத்தின் அறிவுக்கும் ஆண்மைக்குமே ஒரு பெரிய களங்கம். இதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.”

“எது களங்கம்? வீடெல்லாம் சாக்கடைத் தண்ணிரால் அசிங்கமாதி விடக்கூடாதே என்பதற்காக வீட்டின் ஒரு மூலையில் சிறிய சாக்கடை வைத்துக் கட்டுகிறோம். அப்படிக் கட்டுவதால் அது வீட்டுக்கே களங்கம் என்று கூறி விட முடியுமா?” என்னுடைய கேள்வி ஆணித்தரமாக இருந்தது.

நண்பர் ‘முழி முழி’ என்று விழித்தார். எனக்கு எப்படிப் பதில் சொல்வதென்றே உடனே அவருக்குப் புரியவில்லை.

"வேறொன்றிற்காகவும் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. நம்முடைய சமூகத்தில் கண்ணகிக்கும் சீதைக்கும் விழா நடத்துகிறோம். இது மாதிரி ஊழல்களை ஒழிக்க முடியவில்லையே’ என்று வருந்தித்தான் கேட்டேன்’ நண்பரின் தொண்டை கரகரத்தது.

“சமூகத்தில் பெண்ணின் உடல் சம்பந்தமான தேவை மனிதனுக்கு இருக்கிறவரை ஒழிக்க முடியாத பிரச்சனை இது சொல்லப் போனால் இந்த ஊழல் இருப்பதனால் தான் சீதையையும் கண்ணகியையும் புகழ முடிகிறது. இவர்கள் போல் வாழாமல் நன்றாக வாழ்ந்ததற்காகத் தானே அவர்களுக்குப் பெருமை? எல்லாருமே சீதைபோல், கண்ணகிபோல் வாழ்ந்தால் அவர்களுக்கென்று தனிப்பெருமை ஏற்பட்டிருக்க முடியுமா? நன்றாக யோசித்துப் பாரும்!”

“உங்கள் விவாதம் வெகு அழகாக இருக்கிறது. மறுப்புச் சொல்ல முடியாமல் பேசுகிறீர்கள். ஆனால் இவ்வளவு திறமையும் ஒழுங்கீனத்தை அங்கீகரிப்பதற்குப் பயன்படுகிறதே என்பதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.” நண்பருக்கு என்மீது மிகுந்த வருத்தம்.

“மணி எட்டரை ஆகிவிட்டதே. புறப்படலாமா?”நண்பர் எழுந்திருந்தார்.நானும் எழுந்திருந்தேன். இருவரும் கடற்கரையிலிருந்து புறப்பட்டோம்.

இதன் பிறகு பத்துப் பதினைந்து நாட்கள் நான் அந்த நண்பரைச் சந்திக்கவே இல்லை. பின்பு திடீரென்று ஒருநாள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சந்தித்தேன்.

“என்ன சார்? எங்கே? பத்துப் பதினைந்து நாட்களாக ஆளையே காணோம்! ஊரில் இல்லையோ?” என்று விசாரித்தேன்.

வீட்டிலே பிரசவ டயம் அவளை மாமனார் வீட்டில் கொண்டு போய் விட்டு வரப் போயிருந்தேன். போன இடத்திலே ஒரு வாரம் தங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். இருந்துவிட்டு வந்தேன்!”

“அப்போ சாப்பாடெல்லாம் ஹோட்டல் தானா?”