பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி கிழிசல் * 779

“ஆமாம் வீட்டிலே ஒருத்தரும் இல்லைன்னா வேறென்ன செய்யிறது?”

“அது சரிதான் வீட்டில் இல்லையானால் ஹோட்டல்லேதான் சாப்பிடனும்?”

சாப்பிட்டு முடிந்ததும் அவர் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.

ஏழெட்டு நாள் கழித்து ஒருநாள் அதிகாலையில் அவசர காரியம் ஒன்றின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் வெளியே போக வேண்டியிருந்தது. குழந்தைக்கு ஜூரம் மருந்து வாங்குவதற்குப் போக’வேண்டும்.

‘அந்தச் சந்து’ வழியாகப் போனால் சுருக்கப் போய் விடலாம். மெயின்ரோடு சுற்றிப் போனால் அரைமணி அதிகமாகும். பொழுது புலர்ந்தும் புலராமலும் இருக்கிற கருக்கிருட்டு நேரம். ‘யார் எப்படி நினைத்தாலென்ன? காரியம் அவசரம்’ என்று எண்ணிக் கொண்டு, சந்து வழியாகவே கிளம்பினேன். வழக்கமாகச் சாயங்கால நேரங்களில் இருக்கும் கலகலப்பு அப்போது அந்தத் தெருவில் இல்லை. ஆள் வசிக்கிற தெருவாகவே தெரியவில்லை. சந்தின் ஒரு வீட்டு வாயிற்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. தாழ்ப்பாள் நீங்கும் ஒலியோடு கலகலவென ஒரு பெண்ணின் சிரிப்பொலியும் வளையல் ஒலியும் கேட்டன.

அதையடுத்து முகம் மறைந்தும் மறையாமலும் அங்கவஸ்திரத்தால் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டிருந்த மனிதர் ஒருவர் அந்த வீட்டுப் படிகளிலிருந்து இறங்கித் தெருவில் நடந்தார்.

நான்தான் பராக்குப் பார்த்துக் கொண்டே சைக்கிளை விட்டுவிட்டேனோ, அல்லது அந்த மனிதர்தான் பராக்குப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தாரோ? எப்படி நடந்ததென்று தெரியவில்லை!

மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் இலேசாக அவர் மேல் மோதிக் கீழே தள்ளிவிட்டது. நிலைதடுமாறி விழுந்த வேகத்தில் கால்கள் பின்னியதால் அவருடைய அரை வேஷ்டி கறையோரத்தில் ‘பர்’ ரென்று கிழிந்தது. தலையை முடியிருந்த அங்கவஸ்திரம் விலகித் துரப் போய் விழுந்தது. உயர்ந்த ரக செண்ட்டின் வாசனை அவர் ஆடைகளிலிருந்து கிளம்பி வந்து மூக்கைத் துளைத்தது. நான் சைக்கிளை நிறுத்திவிட்டுத் துக்கிவிடுவதற்கு ஒடினேன். காயம் ஒன்றுமில்லை. அதிர்ச்சியில் விழுந்துவிட்டார். அருகில் நெருங்கியதும் திடுக்கிட்டேன். அவர் என் நண்பர்.

“அடேடே சார்வாளா? ஏது? இத்தறுவாய்க்கு இந்தத் தெருப் பக்கம்!” என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.

“போம் ஐயா நீர் சைக்கிளை விட்டுக் கொண்டு வந்த லட்சணம், நல்ல வேஷ்டி - கிழிந்துவிட்டதே?”

“கிழிசல் இப்போதுதானா ஏற்பட்டது? அடடா” என்னுடைய கேள்வியின் சிலேடைப் பொருளை அவர் புரிந்து கொண்டாரோ, இல்லையோ? (1969-க்கு முன்)