பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105. வண்டு

ப்போதும் அப்படியே நடந்தது. கைகளும், கால்களும் சண்பகப் பூங்கொத்துக்களாய்த் துவளப் பொன் கொண்டு பூசினாற் போன்று மின்னும் உடம்போடு வெள்ளை விழிகளினிடையே திராட்சைக் குண்டுகளாய்க் கருமை உருள, ஒவ்வொரு பார்வையிலும் ஓர் புதிய மருட்சியை உண்டாக்கிய படி தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவரைக் கண்டதும் பயந்து முகத்தை திருப்பிக் கொண்டு குடுகுடுவென்று குடிசைக்குள் ஓடிப் போய் விட்டது. மறுபடி வெளியில் வரவே இல்லை. அவர் காத்திருந்தது வீணாகத்தான் போய் விட்டது. அந்தக் குழந்தை நேற்றும் அப்படித்தான் ஓடியது. அதற்கு முந்திய பல தினங்களிலும் கூட அப்படித்தான் ஓடியிருந்தது.

அவருக்கு ஒர் ஆசை. தங்கத்தில் செதுக்கி, மெருகிட்டு உயிரும் ஊட்டித் தவழ விட்டது போன்ற அந்தக் குழந்தையைச் சில விநாடிகள் எடுத்துக் கொஞ்ச வேண்டும். அதன் பிஞ்சுக் கைகள் தன் கழுத்தைச் சுற்றி வளைக்கும்படி, நீண்ட மூக்கைப் பிடித்து இழுக்கும்படி, கன்னங்களைக் கிள்ளும்படி - இன்னும் விதவிதமாக எல்லாம் விளையாட வேண்டுமென்று அந்தக் குழந்தைக்கு ஆசையிருக்கிறதோ, அந்த விதமாக எல்லாம் விளையாடும்படி தன்னை அதனிடம் ஆளக் கொடுத்து விடுவதற்குத் தயாராயிருந்தார் அவர்.

அவரைப் போன்ற நிலையில் உள்ள ஒருவர், இப்படிக் கொஞ்சுவதற்கு ஆசைப்படும் போது குழந்தைகளுக்கா பஞ்சம்? தம்முடைய காரியதரிசியை அழைத்து இப்படி ஒர் ஆசை மனத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பாய் இரண்டொரு வார்த்தைகள் சொன்னால் கூடப் போதும். அவருடைய பெரிய பங்களாவின் வாசலில் ஒரு குழந்தை எக்ஸிபிஷனே நடத்தலாம் போல் அவ்வளவு குழந்தைகள் கூடி விடும்.

ஆனால் புதருக்குள் பூத்த பூவைப் போல் வெளிப் பார்வைக்குத் தெரியாமல் உள்ளேயே மணக்கும் அந்தரங்கமான ஆசையாயிற்றே இது. இந்தக் குழந்தையைப் பார்த்த கணத்தில்தான் இப்படி ஒர் ஆசையே அவருக்கு ஏற்பட்டது. தற்செயலாய்க் காற்றில் விரித்து விட்டபுத்தகத்தின் பக்கத்தைப்போல முன்பின் தொடர்பின்றி இந்தக் குழந்தையைப் பார்த்த முதற்கணத்தில் உண்டாகி அந்தக் கணத்துக்கு அப்பாலும் நிலைத்து விட்ட ஆசை இது.

இந்த ஆசையை அவருடைய தினசரி வழக்கங்களில் ஒன்றாகப் புரிந்து கொண்டு விட்ட கார் டிரைவர் அந்தக் குடிசை வாசலை நெருங்கியதும், வேகத்தைக் குறைத்து மெல்ல நிறுத்துவான். பின்பக்கத்து ஸீட்டின் நடுப்பகுதியிலிருந்து ஓரத்துக்கு நகர்ந்து