பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

781 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

அந்த வயதுக்கு எந்த அளவு அவசரப்பட முடியுமோ அவ்வளவு அவசரப்பட்டுக் காரின் கதவைத் திறந்து கொண்டு அவர் கீழே இறங்குவதற்குள் அந்தக் குழந்தை உள்ளே ஒடிவிடுகிறது. அப்படி ஒடுமுன் ரோஜாமொட்டுக்களைப் போன்ற உதடுகளை மலர்த்தி வலது கைக்கட்டை விரலை இதழோரமாகச் சப்பிக் கொண்டிருக்கும் கோலத்தில் அது நின்றதே அந்தக் காட்சியை மட்டும் அவர் கண்கள் பதிய வைத்துக் கொள்கின்றன.கண்ணுக்கு நம்பிக்கையாலும், ஆசையினாலும் தோன்றும் பொய்யான பிரமைக்காட்சியாய் அந்த இடத்திலேயே அந்தக் குழந்தை நிற்பது போலத் தோற்றுகிறது. நிற்பது போலத்தானே தவிர நிற்பதாக அல்ல. இப்படிச் சில அழகான குழந்தைகளாகப் பிறந்துதான் தெய்வம் இந்த மண்ணில் தவழ்கிறது என்ற நினைப்போடு காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார் மில் முதலாளி மீனாட்சிசுந்தரம்.

அறுபத்தேழு வயதுவரை தனக்கு மனைவியும் மனைவிக்குத் தானும் குழந்தையாக இருந்ததைத் தவிர வேறு குழந்தைகளைப் பெற்றுக் கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லாத ‘தந்தை’யின் மனநிலையைக் கற்பனை செய்து பார்க்க முடியுமானால் திருவாளர் மீனாட்சிசுந்தரத்தின் துன்பங்களை நாமும் புரிந்து கொள்ள முடியும். நாமும் தவிக்க முடியும்.

‘தந்தை’யாவது ஒன்றாவது? அவரைத் தந்தையென்று சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? ‘’யாரைப் பெற்று வளர்த்திருக்கிறார் அவர்?

‘கலைத் தந்தை’ ‘தொழில் தந்தை’என்று செல்வத்தையும் செல்வாக்கையும் மதித்து உலகத்தார் கூட்டம் கூடிப் புகழும் பட்டங்கள் அவரை எது எதற்காகவோ ‘தந்தை’ என்று கூறிக் கொண்டிருந்தன. அப்படி எவ்வெவ்வற்றிற்கு எல்லாம் அவர் புகழ்த் தந்தையாக்கப்பட்டிருந்தாரோ அவற்றை அவர் பெற்றதுமில்லை; வளர்த்தது மில்லை. பெறாமலும் வளர்க்காமலுமே தந்தையாயிருக்க முடியுமா? பெறாததற்கும், வளர்க்காததற்கும் கூடத் தந்தையாக இருக்க முடிந்த உலகமா இது? இருந்தும் என்ன பயன்? பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் ஆசைப்பட்டதை அவர் இன்னும் அடையவில்லையே!

இந்த விநாடியில் அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும். அவருடைய வசதியுள்ள உறவினர்கள்கூடத் தங்கள் குழந்தைகளில் ஏதாவதொன்றை அவர் சுவீகாரம் செய்து கொள்ளும்படி கொடுத்துவிடத் தயாராயிருந்தனர். அவருடைய செல்வச் செழிப்பை ஆதாரமாகக் கொண்டுதான் உறவினர்களுக்கு இந்த ஆசை தோன்றியிருந்தது. மற்றவர்கள் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவரோ பணத்தினால் வாங்கிவிட முடியாத ஒர் அன்புக்காகத் தவித்துக் கொண்டிருந்தார். தம்முடைய மனத்தில் ஏதோ ஒரு வறுமை இருப்பது அவருக்கே புரிந்தது.

இந்தக் குழந்தையைப் பார்க்க நேர்ந்ததிலிருந்து அந்த வறுமை அதிகமாகியிருப்பது போலவும் புரிந்தது.குடிசையின் வாயிலில் நின்று கொண்டிருந்து விட்டு தன்னைக் கண்டதும் உள்ளே ஒடும் இந்தப் பொன்னிறக் குழந்தையோ