பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/ வண்டு 🞸 783

சிவந்திருந்தது. ஆனால் குழந்தையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டவனோ அதைக் கீழே நிற்கச் செய்து விட்டு அடக்க ஒடுக்கமாக அவரருகே ஓடிவந்து இரண்டு கைகளையும் சேர்த்துக் கூப்பினான். அவன் உடம்பு பாதாதிகேசப் பரியந்தம் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் தன்னுடைய மில்லில் வேலை பார்க்கிறவர்களில் ஒருவனாயிருக்க வேண்டுமென்று அவருக்குப் புரிந்தது.

“ஐயா! குழந்தை உங்கள் சட்டையெல்லாம் சேறாக்கிட்டுதுங்களே. துக்கிரியப்ப மவ-நாலு வெக்கணும் முதுகிலே...” என்று குழந்தையைப் பிடித்து அறைவதற்கு இருந்த அவனைத் தடுத்துக் கையமர்த்தினார் அவர்.

“குழந்தையை ஒண்ணும் செய்யாதே! நான்தான் அதைத் துரக்கினேன்...”

“......”

“என்ன வயசாகுது குழந்தைக்கு?.”

“மூணு வருஷம் ரெண்டு மாசமிருக்கும்.”

“என்ன பேரு வச்சிருக்கே..?”

“வண்டு’ன்னு வச்சிருக்கா எம் பொஞ்சாதி. துறுதுறுன்னு எப்பவும் ஏதாச்சும் செய்தியிட்டேயிருக்குது. அதான் வண்டு’ன்னு வச்சிருக்கா.”

“ரொம்பப் பொருத்தமான பேர்தான்.”

“ஏன்?. சுட்டித்தனமா உங்ககிட்ட என்னவாவது செஞ்சிட்டாளா?.”

"அப்படி ஒண்னுமில்லே அழகான குழந்தை. கண்ணு பார்வை துறுதுறுன்னு நடத்தை - பேச்சு எல்லாமே வண்டு போலத்தான் இருக்கு.”

“ஏதோ.. எசமானுக்குப் பிடிச்சுப் போச்சு ரொம்பப் புகழறீங்க...”

“நான் வரேன்...” அவர் புறப்பட்டார். பின்னால் பத்துப் பதினைந்து கெஜதுரம் கார் நிறுத்தியிருந்த இடம் வரை நடந்து போய் எறிக் கொண்டார்.அவர் மனம் மட்டும் அந்தக் குழந்தையைச் சுற்றி நின்று கொண்டது.

டிரைவர் அதுவரை காரருகே நின்றுகொண்டே அந்தக் குடிசை வாசலில் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். அவன் மனத்தில் ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை அந்தரங்கமாக வைத்துக் கொண்டான் அவன்.

அவரைப் பங்களாவில் இறக்கியதும் காரை போர்டிகோவில் அப்படியே விட்டுவிட்டு வந்த வழியே திரும்பி நடந்து புறப்பட்டான் டிரைவர். அதே குடிசை வாசலுக்குப் போய் நின்று கொண்டு கைதட்டினான். குழந்தை இப்போதும் சாக்கடையருகேதான் விளையாடிக் கொண்டிருந்தது.

குழந்தையின் தந்தை குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தான். டிரைவரைப் பார்த்ததும் அவனுடைய தாடிக்கு நடுவே சிரிப்பு மலர்ந்தது.