பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

784 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“வாங்க என்ன சங்கதி...?”

"சங்கதிதான்...ரொம்பப் பெரிய சங்கதி”

மில் கூலியின் தாடிக்கு நடுவே மறுபடி சிரிப்பு மலர்ந்தது.

“ஆமா. நீயும் உன் சம்சாரமும் ரெண்டு பேருமா மில்லிலேதானே வேலை பார்க்கிறீங்க?”

"ஆமாங்க...”

“எத்தினி குழந்தைங்க உங்களுக்கு?”

“ஆறு பொண்ணு... ரெண்டு பையன்...”

“அப்பாடீ. தாங்குமா..?”

“தாங்குதோ...தாங்கலியோ.பெத்துட்டாக் கிணத்துலே பிடிச்சுத் தள்ளிட முடியாதுங்களே. வளர்த்துத்தானே ஆவணும்...”

“நீயேதான் வளர்க்கனுமா? வேறெங்கேயாவது வளரலாமா?”

“நீங்க சொல்றதொண்ணும் புரியலிங்களே?.”

“இப்பிடி வா, சொல்றேன். புரியும்.”

டிரைவரும் மில் கூலியும் காதருகே இரகசியம் பேசுவது போல் சிறிது நேரம் பேசினர். கூலி தயங்கினான்.

“அவ சம்மதிக்கமாட்டாளுங்க. இந்தக் குழந்தை மேலே அவளுக்கு உசிர்... வண்டு.வண்டுன்னு இதுமேலே கொள்ளை ஆசை அவளுக்கு. ராஜா வீட்டுலே பெறக்கற ராணியாக்கும் இதுன்னு அவ சொல்லிப் புகழாத நாளில்லே...”

“அட சர்த்தான்யா... புகழ்லே என்னா பெரயோசனமிருக்கு...? நெஜமாவே ராணியாக்கிப் பார்க்க முடியும் போல சந்தர்ப்பம் வந்திருக்கு பெரிய ஐயா இந்தக் கொழந்தைக்காக மில்லையே எழுதி வைங்கன்னாலும் வச்சிடுவார்.நீ நா சொல்றபடி செய்யி. எட்டுக் கொழந்தைலே ஏழு பத்தாதா உன் சொந்தத்துக்கு?”

“பார்க்கலாம்... எனக்கு யோசிக்க டயம் கொடுங்க... அவளைக் கலந்து பேசிச் சொல்றேன்...”

இது நடந்த மறுநாள் மீனாட்சிசுந்தரம் கோடை வாசத்துக்காக ஊட்டிக்குப் போய்விட்டார். டிரைவரும் உடன் சென்றான். இனி ஒரு மாதம் ஊட்டியில்தான். குளிர்ந்த சூழலில் உதகமண்டலத்தின் வைத்துத் தன் யோசனையை அவருக்குச் சொன்னான் டிரைவர்.

"அந்தக் கொழந்தை மட்டும் கிடைக்கிறதாயிருந்தா இந்த உலகத்தையே அதுக்கு ஈடாகக் கொடுக்கலாம்.” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அவர். அந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு ஆசை அவருக்கு