பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/வண்டு 🞸 785

அந்தக் குழந்தைக்குத் தன்னைத் தந்தையாக நினைத்துப் பார்ப்பதில் ஒரு பெருமிதத்தை உணர்ந்தார் அவர். வண்டு அவர் மனத்திலேயே இடைவிடாமல் சுழன்று கொண்டிருந்தாள். அவளுடைய சுறுசுறுப்பான கண்கள், பேச்சு, ரோஜாப்பூ போன்ற மெல்லிய மேனி - எல்லாவற்றையும் நினைத்து நினைத்து உதகமண்டலத்திலிருந்து திரும்பும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார் அவர். ஏப்ரல் 15ந் தேதி புறப்பட்டவர் மே 16ந்தேதிதான் ஊருக்குத் திரும்பி வர முடிந்தது.

ஊருக்குத் திரும்பிய முதல்நாள் வீட்டிலிருந்து மில்லுக்குக் காரில் புறப்பட்டபோது முப்பது நாள் அந்தக் குழந்தையைப் பார்க்காமல் இருந்துவிட்ட பிரிவின் தாபம் எல்லாம் ஏங்குகிற மனத்தோடு போய்க் கொண்டிருந்தார் அவர்.

ஆனால் என்ன ஏமாற்றம்? குடிசை வாசலில் வண்டு நிற்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாயுங்காலம் மில்லிலிருந்து திரும்பும்போது பார்க்கலாம் என்று நம்பினார். திரும்பும்போதும் வண்டு தென்படவில்லை. மறுநாளும் அப்படியே.வண்டு எங்கும் பறக்கவில்லை.அந்த வாசல் வாடியிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் அவரே அந்தக் குடிசையின் வாசலில் இறங்கிக் கைகளைத் தட்டி உள்ளேயிருந்த வண்டின் தந்தையை அழைத்தார். வண்டின் தந்தை தளர்ந்து போயிருந்தான். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் கோவென்று அழ ஆரம்பித்துவிட்டான். அவன் உதடுகள் உணர்ச்சிவசப்பட்டுத் துடித்தன.

“என்னடாது.? ஏன் அழறே? வண்டு எங்கே காணலே...?”

“வண்டு பறந்துட்டா எசமான். நாலு நாள். அம்மையிலே கிடந்து. உடம்பெல்லாம் பொரிப் பொரியாகக் கொப்புளமாகி...”

அவர் இதயம் தாங்க முடியாத அதிர்ச்சியோடு வீடு திரும்பினார். போர்டிகோவில் காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டு "சார்...வீடு வந்தாச்சு” என்று குல் கொடுத்தான் டிரைவர். தூங்குவதுபோல் உட்கார்ந்திருந்த அவர் தலை சாய்ந்தது. சரிந்தாற்போல் காருக்குள்ளேயே அவர் உடலும் சாய்ந்தது.அந்த உடம்பைத் தாங்கிய டிரைவர் அதில் உயிர் இல்லை என்பதை உணரச் சிறிது நேரம் ஆயிற்று! (1969-க்கு முன்)

நா.பா.II -11