பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/ காக்கை வலிப்பு 🞸 799

முடியுமா? அந்த ‘டேலியா’ப் பூக்கள் இப்படிப் பூத்துக் குலுங்கியிருக்க முடியுமா? கேந்தி, பிச்சி, மல்லிகை, சூரியகாந்தி எல்லாம் எவ்வளவு பூத்திருக்கின்றன. நீதிபதிகள் இதைப் பார்த்தவுடனேயே இதற்குத்தான் முதற்பரிசு என்று உறுதியாக நினைத்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பார்க்கலாம் நாளைக்கு விடிந்தால் தானே தெரிந்து விடுகிறது.அப்பப்பா விடிவதற்கு இன்னும் பன்னிரண்டு மணிநேரம் இருந்து தொலைக்கிறதே. நாளைக்கு மட்டும் சற்று விரைவாகவே பொழுது விடியக்கூடாதோ? நாளைக்கு மாலையில் கார்ப்பரேஷன் மைதானத்தில் நடைபெற விருக்கும் பரிசளிப்பு விழாவில், “திருவாளர் சுகவனம், ஐ.ஸி.எஸ். அவர்களின் தோட்டம்'முதற் பரிசு பெறுகிறது” என்று எட்டுத்திக்கும் ஒலிபெருக்கியில் முழங்கப் போற என் பெயரின் வெற்றி முழக்கத்தை இப்போதே கேட்டுவிட வேண்டும்போல் செவிகள் ஆசையால் துடிக்கின்றனவே! செவிகளே, பொறுத்திருங்கள்! நாளை மாலை வரை பொறுத்திருங்கள்!

பரிசு கிடைத்தால் இந்தப் பயல் பனையப்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கொஞ்சங்கூட அயராமல் உழைத்திருக்கிறான். ஒரு சோடி புது வேட்டியும் பொங்கல் செலவுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் பணமும் கொடுத்துவிட வேண்டியதுதான். தோட்டக்காரனுடைய ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதை இப்படிப் பரிசுக்குத் தயாராக்கியிருக்க முடியுமா? அவனுக்கும்கொஞ்சம் நன்றி செலுத்த வேண்டியதுதான். ஆள் மாடாக உழைத்திருக்கிறான்.

முடிவு வெளியானதும், “என்ன சுகவனம்! இந்த வருடம் உன்னுடைய ‘கார்டன்’ பிரைஸ் வாங்கியிருக்கிறதாமே?” என்று நண்பர்களெல்லாம் அன்புடன் விசாரிக்கப்போவதைக் கற்பனை செய்கிறேன் நான். இப்படிக் கற்பனை செய்வது மனத்துக்கு எவ்வளவு சுகமாக இருக்கிறது! கார்ப்பரேஷன் கமிஷனரோ, சேர்மனோ, பரிசு வழங்கும்போது அதை நான் மேடையேறி வாங்குகிற காட்சியை உள்ளூர்ப் பத்திரிகைக்காரர்கள் புகைப்படம் எடுப்பார்கள். மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அந்தப்படம் முதல் பக்கத்தில் பிரமாதமாக வெளிவரும் அடடா புகழையும் வெற்றிப் பிரதாபத்தையும் கற்பனை செய்வது கொட்டையேயில்லாத பழத்தைச் சுவைத்துச் சாறு உறிஞ்சுவது போல் பரம சுகமாக இருக்கிறதே! பொழுது விடியட்டும் பார்க்கலாம்!

ஒரு வழியாகப் பொழுது விடிகிறது. தோட்டத்தைப் பார்க்க நீதிபதிகள் காரில் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக டெலிஃபோனில் தகவல் வருகிறது.நான் அவசர அவசரமாகத் தயாரானேன். நீதிபதிகளை வரவேற்றுத் தோட்டத்தைச் சுற்றிக் காட்ட வேண்டாமா? தோட்டத்தைச் சுற்றிக் காட்டுகிற முறையிலும் ஒவ்வொன்றையும் பற்றி நான் விவரித்துக் கூறுகிற சாமர்த்தியத்திலுமே அவர்கள் மயங்கிப் போக வேண்டுமே.

என்னைத்தயார் செய்துகொண்டு நீதிபதிகளை வரவேற்கவாசலுக்கு வருகிறேன். இதென்ன? ஐயையே பின்புறம் புல்வெளியில் மூசு முசு என்று முச்சு இரைக்கும் விகாரமான ஒலி. திரும்பிப் பார்க்கிறேன். அடடா இதென்ன அசிங்கம்? இன்றைக்குப்