பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

788 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

பார்த்தா பனையப்பனுக்கு ‘இது’ வர வேண்டும்? நீதிபதிகள் வருகிற அந்த நல்ல நேரத்தில் ரோஜாப் பாத்திகளுக்கு அருகில் மல்லாந்து விழுந்து, கைகளையும் கால்களையும் வலித்து உதைத்துக் கொண்டு கிடந்தான் பனையப்பன். வாயில் இதழோரங்களில் நுரை துள்ளிக் கொண்டிருந்தது. அவனுக்கு இந்த அசிங்கமான வலிப்பு நோய் உண்டு என்பது எனக்குத் தெரியும். எப்போதாவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தோட்டத்திலோ அதன் ஒரு மூலையிலிருக்கும் தன் குடிசையிலோ இந்த அவஸ்தைக் கோலத்தில் பார்ப்பேன் நான். ஆனால் இது சாதாரண வழக்கமாக இருந்தது. இந்தக் கோலத்தில் பார்த்ததும் ஒருபெரிய இரும்புச் சாவியை வேலைக்காரனை விட்டு அவன் கையில் திணிக்கச் சொல்வேன். இதுதான் அவனுக்கு மாமூல் வைத்தியம். சிறிதுநேரத்தில் தெளிந்து எழுந்து மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான் அவன்.

இன்றும் அப்படிச் செய்ய நினைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டேன். ஆனால், வேலைக்காரன் வந்து நிற்பதற்கும், வாயிலில் நீதிபதிகளின் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. சமாளிக்க நேரமே இல்லை.

‘சே! இதென்ன அசிங்கம்? இவர்கள் கண்ணில் இந்த ஆபாசம் படக்கூடாது.’ என்று என் மனம் நினைத்தது. வேலைக்காரனிடம் ஏதோ சொல்ல நினைத்தவன், வாயிலில் காரைப்பார்த்ததும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டு,"நான் சிறிதுநேரம் அவர்களை வாசலிலேயே வரவேற்றுப் பேசிச் சமாளிக்கிறேன். அதற்குள் நீயும், கூர்க்காவுமாக இவனை மெல்லக் கிளப்பி அந்த மூலையில் மனோரஞ்சிதப் புதருக்குப் பின்னால் போட்டு விடுங்கள். மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று வேலைக்காரனுக்கு ஆணையிட்டு விட்டு நீதிபதிகளை வரவேற்க விரைந்தேன். வேலைக்காரன் அப்படியே செய்துவிடுவதாகத் தலையாட்டினான்.

அவன் அப்படியே செய்தும் விட்டான். அவன் அப்படிச்செய்துவிட்டது எனக்கு எப்படித் தெரிந்தது என்றால் நான் நீதிபதிகளை அழைத்துச் சுற்றிக் காட்டிக் கொண்டே ரோஜாப் பாத்திகளுக்கு அருகே வந்தபோது அங்கே தோட்டக்காரன் வலித்துக் கொண்டு கிடக்கவில்லை. பூக்கள்தாம் சிரித்துக் கொண்டிருந்தன. புற்கள்தாம் பசுமை காட்டிக் கொண்டிருந்தன.

எல்லாம் பார்த்தாயிற்று. நீதிபதிகளுக்குப் பரம திருப்தி. எல்லாம் சுற்றிக் காட்டிவிட்டுக் கார் வரை போய் அவர்களை வழியனுப்பினேன். போய் ஒரு மணிநேரத்தில் டெலிஃபோனில் முடிவு சொல்வதாகக் கூறிச் சென்றார்கள். முடிவுதான் எனக்குத் தெரியுமே! என்னைத் தவிர வேறு எவன் பரிசு வாங்க முடியும்?

ஒருமணி நேரத்தில் டெலிபோன் வந்தது. உங்கள் தோட்டத்துக்குத்தான் முதற் பரிசு என்று என் செவிக்கு இனிமையான குரலாக ஒலித்தது முடிவு. எனக்கு உடனே பனையப்பனின் நினைவு பாய்ந்து வந்தது. அவன் கையில் உருவான அழகு தோட்டமல்லவா இது? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கேட்டேன்.

"பனையப்பன் எங்கேடா?”