பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/காக்கை வலிப்பு 🞸 799

"இதோ பார்த்துக் கொண்டு வருகிறேனுங்க” என்று கூறிவிட்டு ஓடினான் அவன்.

சிறிது நேரங் கழித்து அவன் திரும்பி வந்து தலைகுனிந்து நின்றான்.

“என்னடா? பனையப்பன் எங்கே?” .

“வாங்க காட்டுறேன்!” நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

மனோரஞ்சிதப் புதரருகில் அவன் உடம்பு நீலம் பாரித்துக் கிடந்தது.

“என்னடா?”

“இந்தப் புதர்லே நிறைய நல்ல பாம்பு உண்டுங்க”

“அடப் பாவி”

“நாங்க என்ன செய்யிறதுங்க. நீங்க போடச் சொன்னிங்க, கொண்டு வந்து போட்டோம்?”

“கையிலே சாவியைக் கொடுத்துப் போடலியாடா?”

“நீங்க அப்படிச் சொல்லலீங்களே.”

“நான் சொல்லணுமா அதை.”

அன்று மாலை திருவாளர் சுகவனம் ஐ.எபி.எஸ். அவர்கள் தமது அழகிய தோட்டத்துக்கு முதல் பரிசு வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தோட்டக்காரப் பனையப்பன் சுடலையில் எரிந்து கொண்டிருந்தான். அதற்கென்ன செய்வது?

பார்ப்பதற்கு அழகாயில்லாவிட்டால் வேறு எது இருந்தாலும் மன்னிக்கக் கூடாதுதானே? (1969-க்கு முன்)