பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/காந்தி நூற்றாண்டு விழா 🞸 791

மாமா தேடிவந்து சொல்லியும் நாச்சியப்பனுக்கு உறைக்கவில்லை. ‘இந்தப்பசி’ வந்தால் அவருக்கு எல்லாமே பறந்துவிடும்.

அது ஒரு வேடிக்கையான குடும்பம். மாமா குமாரசாமி காந்தி கட்சி. தேசப் போராட்டக் காலத்தில் சிறை சென்று மீண்டவர். கையால் நூற்றுச் சிட்டம் போட்டுத்தான் வேட்டி துணிமணி வாங்குவார். மருமகன் நாச்சியப்பன் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி. இந்தக் காலத்தில் எந்தக் கட்சியுமில்லாமல் எல்லாத் தொழிலதிபர்களையும் போல் அவ்வப்போது பதவியில் இருக்கிறவர்களை விரோதித்துக் கொள்ளாமல் வாழப் பழகிவிட்டவர். வயது ஐம்பத்தொன்பது. அடுத்த வருடம் அறுபதாண்டு நிறைவும் கொண்டாடியாக வேண்டும். ஆனால் அதைக் கொண்டாடுவதற்குப் பிள்ளைகள் இல்லை. பெண்களும் இல்லை. குடும்ப வாழ்வின் கலகலப்பு வீட்டில் இல்லாததால் வெளியே பழகுவதற்குக் கெட்ட பழக்கங்களை ஒவ்வொன்றாக ஏற்படுத்திக் கொண்டு விட்டார் நாச்சியப்பன். பெங்களுர் ரேசின் போது பெங்களுர், ஹைதராபாத் ரேசின் போது ஹைதராபாத், பம்பாய் ரேசின் போது பம்பாய் என்று சுற்றுவது அவர் வழக்கமாகி விட்டது; அதை ஒட்டி வேறு பல கெட்ட பழக்கங்களும் ஏற்பட்டிருந்தன. அதில் பயங்கரமானது குடிப்பழக்கம்.

“இன்னும் தொடர்ந்து ஒரு வருஷ காலம் இப்படிக் குடிச்சீங்களோ குடலே இருக்காது. குடலை முழுக்க அரிச்சிப்பிடும்” என்று சில வாரங்களுக்கு முன் மாமா குமாரசாமியும் அருகில் இருந்தபோதே எச்சரித்திருந்தார், குடும்ப டாக்டர்.அப்போது மாமா குமாரசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி, “அடுத்த மாதம் காந்தி நூற்றாண்டு மாதம், அக்டோபர் ஒண்ணாந்தேதியிலிருந்தே நான் குடிக்கப் பிடாதுங்கறீங்க. எனக்கு மதுவிலக்கு, அஹிம்சை இதிலெல்லாம் நம்பிகை இருந்த தில்லை. ஆனா நீங்க இதையெல்லாம் நம்பறீங்க; கடைப்பிடிக்கிறீங்க. உங்களுக்காக வேண்டியாவது அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இதையெல்லாம் விட்டுடறதா ப்ராமிஸ் பண்றேன், மாமா!” என்று அப்போது தாம் செய்த உறுதியையும் இப்போது நாச்சியப்பன் மறந்து விட்டார். நாச்சியப்பனின் மனைவி வந்து தன் அண்ணா வயதுள்ள குமாரசாமியிடம் அழுதாள். குமாரசாமிக் கிழவர் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் வந்து நாச்சியப்பனைக் கண்டித்துப் பார்த்தார். பச்சைப் பிள்ளையாகவோ குழந்தையாகவோ இருந்தால் இன்னும் அதிகமாகக் கண்டிக்கலாம். ஐம்பத்தொன்பது வயதுக் கிழவனுக்கு இதைவிட இன்னும் கடுமையாக என்ன சொல்ல முடியும்?

“அவன் கேட்கமாட்டான் போலிருக்கிறது அம்மா! அவன் வளர்ந்தவிதம் அப்படி நீ வருத்தப்பட்டதுக்கு நான் தேடி வந்து சொல்லியாச்சு அவன் கேட்கலை. குடிச்சுக் குடிச்சுத்தான் சாகணும்னு அவன் தலையிலே எழுதியிருந்தா நாம என்ன செய்ய முடியும்” என்று மாமா குமாரசாமிக் கிழவர் “”நாச்சியப்பனின் மனைவியிடத்தில் அலுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.