பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

792 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

நிர்வாகி என்ற முறையில் அவர் அன்று காலையில் தமது நிர்வாகத்தில் இருந்து மகாத்மா காந்தி பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியிருந்தது. குழந்தைகள் பள்ளி மைதானத்தில் தேசத் தந்தை காந்திக்கு அஞ்சலி செய்யக் கூடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனாமல் காந்தி பேட்ஜும் மிட்டாயும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர் போய்ச் சேர்ந்தாக வேண்டும்.

இப்போது காலை ஒன்பது மணி. அவர் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டார். நாச்சியப்பனுக்குக் காலை பத்து மணிக்கு விமானம். வீட்டிலிருந்து ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்டாலும் போதும். தியாகராய நகரிலிருந்து விமான நிலையத்துக்குப்போவதற்கு இருபது நிமிஷங்கள் தாராளமாகப்போதும்.அவருடைய சவர்லே - இம்பாலா பன்னிரண்டு நிமிஷங்களில் விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்த்து விடும். பல தடவை போய்ப் பழகிவிட்டதனால் இப்போதெல்லாம் அங்கே போய்க் காத்திருப்பதற்கு அவர் தயாராயில்லை. ஒவ்வொரு தொழிலிலும் நிறைய லாபம். முதலீடு செய்திருந்த எல்லாம் நாலு மடங்காக லாபம் தரும் நிலை. குழந்தை குட்டி இல்லாத குடும்பம். எவ்வளவு செலவழித்தாலும் தீராத வசதி. கொஞ்சம் தேசபக்தியோ தெய்வபக்தியோ உள்ளவராக வளர்ந்திருந்தால் நாச்சியப்பன் இப்படிக் கெட்டுப் போயிருக்க முடியாது. ஆனால் இரண்டுமே இல்லை. அவர் இதுவரை செய்திருந்த ஒரே நல்ல காரியம் தந்தையின் நினைவாகக் கட்டிய ஒரு பள்ளிக்கூடம் தான். அதற்குக் காந்தி மகான் பெயரைச் சூட்டியதற்குக்கூட மாமா குமாரசாமிக் கிழவரின் வற்புறுத்தல்தான் காரணம். ‘பழனியப்பர் ஞாபகார்த்த மகாத்மா காந்தி பள்ளிக்கூடம்’ என்று இரண்டு பெயரையும் சேர்த்தே பள்ளிக்குச் சூட்டச் செய்திருந்தார் மாமா, அந்தப் பள்ளிக்கூடம் சம்பந்தமான கணக்கு வழக்கு வரவு செலவு எல்லாம் கூடக் கிழவருக்குத் தான் தெரியும்.நாச்சியப்பன் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதே இல்லை. ‘செக்’கில் கையெழுத்துப்போடுவது, வருடமுடிவில், ‘பாலன்ஸ் ஷீட்’ பார்ப்பது தவிரத் தொழில் நிறுவனங்களை, அன்றாட நிர்வாகங்களை அவருடைய தந்தையின் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்திருந்த விசுவாசமான ஊழியர்கள் தாம் கவனித்தார்கள். அதனால் பழுதுபடாத பழகிய யந்திரங்களைப் போல் எல்லாம் அவருடைய கவனிப்பின்றியும் நன்றாகவே இயங்கி வந்தன.

இளமையிலிருந்தே கிளப் வாழ்க்கை, ரேஸ், மதுப்பழக்கம் இவற்றினால் ஒரளவு பாழாகியிருந்த நாச்சியப்பன் குடும்ப வாழ்வின் செல்வமாகிய மக்கட் செல்வமும் இல்லாமற் போகவே விரக்தியில் இன்னும் மோசமாக மாறினார்.தந்தை காலமானபின் அவரைத் தட்டிக்கேட்க ஆளில்லாது போயிற்று. மாமா குமாரசாமி அகிம்சாவாதி. சாது. எதையும் எடுத்துச் சொல்லி அறிவுரை கூறுவாரே ஒழிய மனம் புண்படும்படி கூறி நிர்ப்பந்திக்க அவருக்குத் தெரியாது. நாச்சியப்பனின் குடும்பத்தோடு சேர்ந்து குடியிருக்காமல் கிழவர் தனியாக வேறு வீட்டில் குடியிருந்ததற்குக் காரணமே அவருடைய பழக்க வழக்கங்களும் தம்முடைய பழக்க வழக்கங்களும் ஒத்துக்கொள்ள மாட்டா என்பதனால்தான்.