பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம்‌ தொகுதி / காந்தி நூற்றாண்டு விழா ★ 793



சரியாக ஒன்பதடித்து முப்பத்தொன்பதாவது நிமிஷத்தில்‌ டிரைவர்‌ கப்பல்‌ போல்‌ நீண்ட காரைப்‌ போர்ட்டிகோவில்‌ கொண்டு வந்து நிறுத்தினான்‌. நாச்சியப்பனின்‌ காரியதரிசி ஐயாயிர ரூபாய்‌ ரொக்கம்‌ அடங்கிய சூட்கேஸ்‌ ஒன்றைக்‌ கொண்டு வந்து அவரிடம்‌ கொடுத்தான்‌. வீட்டம்மாள்‌ வெளியே அவரை வழியனுப்ப வரவே இல்லை; அன்று கிழவர்‌ வீடு தேடிவந்து அவருக்குச்‌ சொன்ன அறிவுரையை அவர்‌ கேட்கவில்லை என்று அவளுக்குக்‌ கோபம்‌. டாக்டரிடம்‌ சத்தியம்‌ பண்ணிக்‌ கொடுத்தபடி காந்தி நூற்றாண்டு வருடத்திலிருந்து அவர்‌ குடிப்பழக்கத்தை விடப்‌ போவதில்லை என்று அறிந்த பின்போ அவள்‌ கோபம்‌ இன்னும்‌ இரண்டு மடங்காகியிருந்தது.

சரியாக ஒன்பது நாற்பதுக்குக்‌ கார்‌ போர்ட்டி கோவிலிருந்து புறப்பட்டது. உள்ளே ரேடியோவில்‌ காந்தி நூற்றாண்டை ஒட்டி உள்ளத்தைப்‌ பிழியும்‌ குரலில்‌ யாரோ ‘ரகுபதி ராசகவ’ பிரர்த்தனை பாடுவது கார்‌ புறப்படுகையில்‌ அவருக்குக்‌ கேட்டது. அந்தக்‌ குரலில்‌ ஒரு விநாடி நாச்சியப்பன்‌ வசப்பட்டார்‌. அடுத்த விநாடியில்‌ திரும்பத்‌ தெருவில்‌ இறங்கிவிட்டது; வீதிச்‌ சுவர்களில்‌ எல்லாம்‌ மகாத்மா காந்தியின்‌ பெரிய பெரிய படங்கள்‌. பெரிய பெரிய பானர்கள்‌.

‘பொதுமக்கள்‌ அனைவருக்கும்‌ பகிர்ந்தளிக்கப்படாத எந்தச்‌ சுகத்தையும்‌ நான்‌ ஏற்கமாட்டேன்‌.’

‘சத்தியாகிரகத்தில்‌ தோல்வி என்ற பேச்சே கிடையாது.’

‘உழைக்காமல்‌ இருப்பவனுக்கு உண்பதற்கு மட்டும்‌ என்ன உரிமை இருக்கிறது?’

இவ்வாறெல்லாம்‌ அந்தச்‌ சிலைகளில்‌ வாசகங்கள்‌ எழுதியிருந்தன. அங்கங்கே பிளாட்பாரங்களிலும்‌ தெருமுனைகளிலும்‌ சிறுசிறு பந்தல்‌ போட்டு அதில்‌ காந்தி படம்‌ வைத்து மாலையிட்டு ஊதுவத்தி கொளுத்தி வைத்து அலங்கரித்திருத்தார்கள்‌. சட்டையில்‌ எனாமல்‌ காந்தி சின்னங்களை அணிந்து தெருக்களிலும்‌ மேடைகளிலும்‌ கூட்டம்‌ கூட்டமாகப்‌ பள்ளிக்கூடச்‌ சிறுவர்‌ சிறுமியர்‌ போய்க்கொண்டிருந்தனர்‌.

கார்‌ மவுண்ட்ரோடு திரும்பி மீனம்பாக்கத்துக்காகத்‌ தெற்கு நோக்கி விரைந்தது. ஓர்‌ சத்தியப்‌ பெருந்‌ திருவிழாவில்‌ நகரமே குதூகலமாக இருக்கும்போது தாம்‌ எங்கோ மயானத்தைத்‌ தேடித்‌ தனியே போய்க்‌ கொண்டிருப்பது போல்‌ ஒரு விநாடி அவருக்கு பிரமை உண்டாயிற்று.

குழந்தைகள்‌, இளைஞர்கள்‌, ஆண்கள்‌, பெண்கள்‌, கிழவர்கள்‌, நடுத்தர்‌ வயதினர்‌ எல்லாரும்‌ கொண்டாடும்படி இந்தக்‌ கிழவன்‌ ஏதோ பெரிய விஷயங்களை இந்த நாட்டுக்குக்‌ கொடுத்துவிட்டுப்‌ போயிருக்கிறான்‌.

எதிரே வந்த சிறுவர்‌ சிறுமியர்‌ ஊரர்வலத்தினால்‌ கார்‌ போவது தடைப்பட்டது. எங்கும்‌ எல்லா இடத்திலும்‌ காந்தி என்னும்‌ மகா கங்கையில்‌ மூழ்கித்‌ திளைத்துக்கொண்டிருந்தது ஊர்‌: தாம்‌ மட்டும்‌ ரூபாய்‌ நோட்டுக்களின்‌ துணையோடு எங்கோ எதையோ பொய்யான சுகம்‌ தரும்‌ பொருளைத்‌ தேடி அநியாய வேகத்தில்‌ ஓடிக்‌ கொண்டிருப்பதுபோல உணர்ந்தார்‌ அவர்‌. ஊர்வலம்‌ சாலையைக்‌ கடக்கிறவரை