பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

794 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

சில நிமிஷங்கள் கார் நிற்க வேண்டியதாயிற்று. அந்தக் காலை வேளையிலே அத்தனை சிறுவர் சிறுமியரின் முகங்களைக் காண்பதற்கு உற்சாகமாக இருந்தது; தம் வீட்டில் இப்படி எந்தக் குழந்தையும் இல்லை என்ற நினைவு வந்தபோது நெடுமூச்சு வந்தது அவருக்கு. நெஞ்சை இதற்கு முன்பு எப்போதுமே பிசைந்திராத சில உணர்வுகள் பிசைவதாக இந்த விநாடியில் இன்று உணர்ந்தார் நாச்சியப்பன். விமான நிலையத்திற்குப் போய்ச்சேர நேரமாகிவிட்டதே என்ற அவசரத்தில் முழு ஊர்வலமும் கடந்து நாலைந்து பையன்கள் மட்டும் பின்தங்கி வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஹார்ன் கொடுத்துவிட்டுக் காரைச் செலுத்தினான் டிரைவர். திடீரென்று கப்பலைப் போல பெரிய கார் எதிரே பாய்ந்து வரவும், அந்த நாலைந்து பையன்களும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சிதறி ஓடினர். அப்படி ஒடியபோது ஒரு பையன் பதற்றத்தில் தன் கையில் இருந்த காந்தி பொம்மை ஒன்றைக் கீழே போட்டுவிட்டுப் பொம்மை உடைந்த நஷ்டத்தில் ஒடவும் தோன்றாமல் நடுத்தெருவில் நின்று அப்படியே அழத் தொடங்கிவிட்டான். அழுது கொண்டே நடுரோட்டில் நின்ற சிறுவனை விலக்க டிரைவர் எவ்வளவோ ஹாரன் அடித்தும் பையனின் அழுகைதான் அதிகமாயிற்று.

“கொஞ்சம் நிறுத்து” என்று சொல்லி நாச்சியப்பனே கீழே இறங்கி அந்தப் பையனருகே சென்று, "இந்தா தம்பி அழாதே இந்த ரூபாயை வச்சுக்க புதுக் காந்தி பொம்மை வாங்கிக்க இப்ப வழி விடு. நீ ரொம்ப நல்ல பையனாச்சே!” என்று ஒரு புத்தம் புதிய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“ஊவா வேணாம், பொம்மை தான் வேணும் உம் ஊம்” என்று பையன் விடாமல் அழவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பையனுக்கு அப்பாவோ, அம்மாவோ, பெரியவர்கள் யாரும் அக்கம்பக்கத்தில் நிற்பதாகத் தெரியவில்லை. பின்னால் ஏராளமான கார்களும் பஸ்களும் லாரிகளும் சேர்ந்து ஒரே ஹாரன் முழக்கங்களாக ஒலித்துக் கொண்டிருந்தன. பையனோ அசையாமல் நடுரோட்டில் நின்று காந்தி பொம்மை தான் வேண்டுமென்று அடம் பிடித்தான். பின்னால் இருந்த எல்லா வண்டிகளிலிருந்தும் நாச்சியப்பனை நோக்கிப் பல பார்வைகள் முறைத்தன; கடுகடுத்தன. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு முதலில் வண்டிப் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொள்ள எண்ணி,“பொம்மை வாங்கித் தருகிறேன்! என்னோட காரிலே வா” என்று நயமாகச் சொல்லிப் பையனைக் காரில் ஏற்றிக் கொண்டு மற்றக் கார்க்கு வழிவிட்டுத்தம் காரை ஒதுக்கிநிறுத்தச் சொன்னார். ஒதுக்கி நிறுத்தியபின்பும், “அஞ்சுருபா போறாதுன்னா பத்து ரூபா தரேண்டா கண்ணு. ஒண்ணுக்கு ரெண்டு காந்தி பொம்மையாவாங்கிக்கோ” என்று மன்றாடிப் பார்த்தார். பையன் பொம்மை தான் வேண்டுமென்று பிடிவாதமாக அழுது அடம் பிடித்தான்.

விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பையனை அப்படியே அழுதால் அழட்டும் என்று தெருவோரமாக இறக்கி விட்டு விமான நிலையத்துக்கு விரைந்துவிடலாம். அப்படிச் செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனால் செய்ய மனம் வரவில்லை. அந்தப் பையனின் பால் வடியும் முகம் அவரை ஆட்கொண்டது. குழந்தையில்லாத மலட்டுத்