பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/காந்தி நூற்றாண்டு விழா 🞸 799

தந்தையான அவருக்கு ஒர் அழகான குழந்தையை ஏமாற்றுவதற்கும் துணிவில்லை. எத்தனையோ கெட்ட பழக்கங்கள் உள்ள பணக்காரராக இருந்தும் குடும்பத்தின் பரம்பரைப் பெருந் தன்மை அவரிடம் இருந்தது. யாரையும் அவர் ஏமாற்றியதில்லை. வார்த்தைகளைக் காப்பாற்றாமல் மோசம் செய்ததில்லை. ஆனால் பழக்கதோஷம் காரணமாக மதுவிலக்குப் பற்றி டாக்டருக்குக் கொடுத்த வாக்கை மட்டும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

“சரி! வண்டியைத் திருப்பிப் பாண்டிபஜாரிலே ஏதாவது ஒரு பொம்மைக் கடைக்கு விடு.நவராத்திரி வர்ரதே. தெருவிலேயே பொம்மைக்கடை நிறைய இருக்கும்” என்று டிரைவருக்கு உத்தரவிட்டார் நாச்சியப்பன்.

“பாண்டிபஜார் போய் வர்ரதுக்குள்ளே பிளேன் போயிடுங்க”

"பரவாயில்லே! என்ன செய்யிறது? பையன் கேட்கமாட்டேங்கிறானே!”

கார் திரும்பிப் பாண்டிபஜாருக்குப் போயிற்று. பிளாட்பாரத்தின் மேலேயே பெஞ்சுகள் போட்டுப் பொம்மைகளை அடுக்கியிருந்த ஒரு கடையருகே காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார் அவர். பொம்மைக் கடையைப் பார்த்தும் பையனும் அழுகையை நிறுத்தி விட்டு அவரோடு இறங்கினான்.

காந்தி ஊன்றுகோலுடன் நிற்பது போன்ற பொன்னிற வர்ணமடித்த பொம்மைகள் இரண்டே இரண்டுதான் கடையில் இருந்தன.ஒரு பொம்மை பன்னிரண்டு ரூபாய் என்று கடைக்காரன் விலை சொன்னான். இரண்டு பொம்மைகளுக்குமே பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார் அவர். ஒரு பொம்மையைப் பையன் கையில் கொடுத்தபோது அவன் அதை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்கிறவனைப்போல் அந்தப் பொம்மையை நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டிருந்தான். அவரும் பையனும் பொம்மைகளுடன் காரில் ஏறியதும், “எங்கே போக” என்று கேட்டான் டிரைவர்.

“திரும்ப வீட்டுக்கே விடு”

கார் வீட்டை நோக்கித் திரும்பியது. கார்போர்ட்டிகோவில் நின்றதும் பையனை உள்ளே அழைத்துச் சென்றார் நாச்சியப்பன். உள்ளே இருந்த அவர் மனைவி வெளியே கார் ஓசை கேட்டு வந்தாள். நாச்சியப்பன் அவளை நோக்கி முகம் மலர்ந்தபடியே, "இந்தா இந்த வருஷத்திலிருந்து நம்ம வீட்டுக் கொலுவிலே இந்தப் பொம்மையையும் ராமர், கிருஷ்ணன், புத்தர், விவேகானந்தர் பொம்மையோட அதே வரிசையிலே சேர்த்து வை. இன்னிக்கி வரை இந்தப் பொம்மையை வைக்கும் யோக்கியதை இந்த வீட்டுக்கு இல்லாமல் இருந்தது; இனிமே அது வந்துடும்” என்று கூறித் தம்மிடம் இருந்த மற்றொரு பொம்மையை அவளிடம் கொடுத்தார். பிரிஜ்ஜை திறந்து பையனுக்கு ஒர் ஆப்பிள் எடுத்துக்கொடுத்தபோது ஞாபகமாக அதில் புத்தம் புதிதாய் அடுக்கியிருந்த மதுப்பாட்டில்களை எல்லாம் ஜன்னல் வழியே வெளியில் எடுத்தெறிந்தார் நாச்சியப்பன்.