பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

798 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

ஜூலியைத் தனியே பம்பாயில் விட்டு விட்டுப் போவதா அல்லது தன்னோடு சென்னை வரை அழைத்துச்சென்றுவிட்டு அங்கேயே கன்னிமரா ஹோட்டலிலாவது வேறெங்காவது தங்கச் செய்த பின் தான் மட்டும் கிராமத்துக்குப் போய பெரியம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்புவதா என்று சுகுமாரன் சிந்தித்தான் இன்னும் சில வாரங்களில் டில்லியிலோ, வேறு ஏதாவது வடஇந்திய மாநிலத் தலைநகரங்களிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திலோஸ்பேஸ் டெக்னாலஜி-விண்வெளி சம்பந்தமான துறை ஒன்றின் தலைமைப் பதவியை அவன் ஏற்க வேண்டியிருக்கும். கிராமத்துக்கு போய் பெரியம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாயிருந்தால் அதற்கு முன்பே போய்விட்டுத் திரும்பினால்தான் உண்டு.

நிறைய நிலபுலன் சொத்துடன் பால்யத்திலேயே விதவையாகி விட்ட அந்தப் பெரியம்மாதான் - தாய் தந்தையற்று அநாதையாகிவிட்ட அவனைச் சிறுவயதிலேயே எடுத்து வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கியிருந்தாள். கல்லூரிப் படிப்பு வரை அவனுடைய செலவுகளைக் கவனித்துக் கொண்டதோடு மட்டுமின்றிப் படிப்பு முடிந்ததும் அவன் சில ஆண்டுகள் விரிவுரையாளராக இருந்தபின் மேற்படிப்புக்காக மேல்நாடு புறப்பட்போது அதற்குப் பணஉதவி செய்ததும் பெரியம்மாதான். இவற்றையெல்லாம் நினைத்தபோது கிராமத்துக்குப் போய் பெரியம்மாவைப் பார்க்காமல் தட்டிக் கழிப்பது நியாயமில்லை என்றே தோன்றியது.

மேல்நாட்டிலிருந்து வந்து இறங்கிய தினத்தன்று மேல் நாட்டுப் பாணி வாழ்வில் பழகிய ஒரு தென்னிந்திய மலையாளி சிநேகிதனின் குடும்பத்தோடு அவனும் ஜூலியும் பம்பாயில் தங்கினர். ஒர் இடத்துக்குப் போகும் முன்னோ, தங்கும் முன்னோ அந்த இடம் ஜூலிக்கு அசெளகரியம் இல்லாமல் இருக்குமா என்பதையும் இப்போது அவன் நினைத்துப் பார்த்தாக வேண்டியிருந்தது.

“சென்னை வரை விமானத்தில் போய் அப்புறம் கிராமத்துக்கு இரயிலில் போய்த் திரும்பிவிட்டு மறுபடியும் சென்னையிலிருந்து பம்பாய்க்கு விமானத்திலேயே திருப்பினர்களாயின் நாலைந்து நாட்களை மீதப்படுத்தலாம். ஜுலியைப் பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் திரும்பி வருகிறவரை அவள் இங்கேயே எங்கள் குடும்பத்தோடு ஒரு குறைவும் இன்றி இருக்கலாம்” என்றார் சிநேகிதர்.

சுகுமாரன் இந்தப் பிரயாண விஷயமாக ஜூலியைக் கலந்தாலோசித்தபோது, ‘தன்னைத் தவிர்த்துவிட்டு அவன் தனியே பெரியம்மாவைப் பார்க்கப் போக வேண்டும்’ என்று கூறியதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.“ஏன்? உங்கள் பெரியம்மாவையும், ஒர்அமைதி நிறைந்த இந்தியக் கிராமத்தையும் காண நானும் உங்களுடன் கூட வருவதில் என்ன தவறு?” என்று கேட்டாள் அவள் அவளுக்கு விளக்குவது அவனுக்குத் தர்மசங்கடமாயிருந்தது.

“நீநினைப்பதுபோல் எங்கள் இந்தியக் கிராமங்களில் அமைதியும் அழகும் மட்டும் இல்லை. வம்பு பேசுவதும் நாகரிகக் குறைவான வார்த்தைகளால் நேருக்கு நேர் விசாரிப்பதும், புதுமையை அங்கீகரிக்கவும் ஏற்கவும் தயங்குகிற கிணற்றுத் தவளை