பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/பனையூர் என்றொரு பல்கலைக்கழகம் 🞸 799

மனப்பான்மையுமே இன்னும் எங்கள் கிராமங்களில் இருக்கின்றன தாராள மனப்பான்மை குறைவு.புறம்பேசுதல் அதிகம்,ஆழமான விருப்பு வெறுப்புக்கள் நிறைய இருக்கும்.”

இப்படி அவன் கூறியதை அந்த அமெரிக்க யுவதி உடன்நம்பிவிடவில்லை.“நீங்கள் அநாவசியமாக மிகைப்படுத்திச் சொல்கிறீர்களோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றுதான் சிரித்தபடி அவள் அவனிடம் கூறினாள். அவளை ஒருவாறு பம்பாயில் இருக்கும்படிசமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தபின்பே மறுநாள் காலை அவன் சென்னைக்கு விமானம் ஏறினான்.

கிராமத்தில் எந்தக் கேள்வியை அவன் அநாகரிகமாக எதிர்பார்த்தானோ, அதைப் பம்பாயிலும், சென்னையிலுமே பலர் அவனைக் கேட்டுவிட்டார்கள்.

பம்பாயில் அவன் வந்து இறங்கியபோதும், ஜூலி அருகிலிருந்தபோதும் அவனைக் கேட்கத் தயங்கிய கேள்விகளையெல்லாம் தனியே அவனிடம் கேட்டே விட்டார்கள். கொச்சையாகவும், பச்சையாகவுமே கூடக் கேட்டார்கள்.

“எங்கேடா பிடிச்சே இந்த வாளிப்பை?” என்றான் ஒரு சம வயது நண்பன்.

"அவள் உங்கிட்ட மயங்கினாளோ நீ அவள் கிட்ட மயங்கினியோ?” என்றான் இன்னொரு குறும்புக்காரச் சிநேகிதன்.

“முதல் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறே? அவ சொல்ற பேரா? நீ நினைக்கிற பேரா?” என்றார் ஒரு நடுத்தர வயது நண்பர்.

வேடிக்கையாகவும் சகஜமாகவும் இந்தக் கேள்விகளை அவன் எடுத்துக் கொண்டாலும் ஒரு தனிமனிதனின் சொந்த விஷயம்-அதாவது-பிரைவேட் அஃபேர் பற்றிப் படித்த நண்பர்கள்கூட இந்தியாவில் இவ்வளவு அலட்டிக் கொள்வது ஏன் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. இழுத்து நிறுத்தி வைத்துச் சொல்லத் தொடங்கினாலும் அடுத்தவனுடைய சொந்த விஷயத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நாகரிகமும் பண்பும் உள்ள நாடுகளில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய பின் இங்கே படித்த இந்தியன் கூடப் பின்தங்கியிருப்பதாகவே தான் தோன்றியது சுகுமாரனுக்கு.

முதலில் ஸ்பேஸ் டெக்னாலஜி கற்றுக் கொடுப்பதற்கு முன் காசியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இந்தியர்களுக்கு ‘பிளிஸிங் மேனர்ஸ்’ கற்றுக் கொடுப்பதற்குப் பலநூறு பல்கலைக்கழகங்களை உடனே திறக்க வேண்டும்போல் சுகுமாரன் எண்ணினான்.

‘ஒன்ஸ் மேரேஜ் இஸ் எ பிரைவேட் அஃபேர்’ என்று சிரித்துக்கொண்டே கூறும் பல வெளிநாட்டு நண்பர்கள் அவன் நினைவுக்கு வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அவனைச் சந்தித்த உறவினர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவன் செய்த மிகப் பெரிய திருட்டு ஒன்றுக்காக அவனை விசாரிப்பது போன்ற குரலில், “ஏண்டா ஒரு அமெரிக்கன் லேடியைக் கூடவே கூட்டிண்டு