பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

800 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

வந்திருக்கியாமே?” என்று கேட்டபோது அவனுக்குத் தாங்க முடியாத எரிச்சல் மூண்டது. அவர் விசாரித்த விதம் அப்படி இருந்தது. அவன் ஜூலியைத் திருமணம் செய்து மனைவியாக அழைத்துக்கொண்டு வந்ததைக்கூட ஒப்புக் கொள்ளாமல் கூடவே கூட்டிண்டு வந்திருக்கியாமே?’ என்று எதையோ எப்படியோ கேட்பதுபோல் அவர் விசாரித்ததைக் கண்டு,

‘கடவுளே! என் நாட்டவருக்கு முதலில் நாகரிகத்தைக் கற்றுக் கொடு’ என்று வாய்விட்டுக் கதற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புகழ் வாய்ந்த பழமையும் குழப்பமான தற்காலமும், புரியாத எதிர்காலமும் உள்ள ஒரு நாட்டின் பண்பாட்டு வறட்சியைப் பொறுக்க முடியாமல் தவித்தான் அவன்.

சென்னையில் அவன் கிராமத்துக்கு இரயிலேறுவதற்கு முன் தங்கியிருந்த அரை நாளில் எதிர்கொள்ள முடியாததும் அவன் பதில் கூறத் தர்மசங்கடப்படுவதுமான உரையாடல்களை இப்படி நிறையக் கேட்டு விட்டான்.

சென்னையில் அவன் தங்கியிருந்த வீட்டிலே அவன் உட்கார்ந்திருந்த அறையின் ஜன்னலருகே அந்த வீட்டின் படித்த நாட்டுப் பெண்கள் இருவரே கீழ்வருமாறு உரையாடியதை அவன் கேட்க நேர்ந்தது:

"ஜூலியோ, கோலியோ, யாரோ ஒரு பெண்ணை இழுத்துண்டு வந்துட்டானாமே?”

“ஆமா! அவளைப் பெரியம்மாவுக்குப் பயந்து பம்பாயிலேயே விட்டுட்டு வந்திருக்கானாம். இவனைத் திட்டித் தீர்க்கறதுக்காகப் பெரியம்மா கிராமத்துக்கு வரச் சொல்லியிருக்களாம். அதான் வந்திருக்கிறான். இன்னி ராத்திரி ரயில்லே போறான் பனையூருக்கு.”

“சொத்தெல்லாம் செலவழிச்சுப் படிக்க வச்சதுக்குக் கிழவிக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும் பாவம் அவ யாரோகோமுவையோ ஜானுவையோ ஜாதகத்தைத் துருவித் துருவிப் பார்த்துத் தயாரா இவனுக்காக வைச்சுண்டிருந்திருப்பா. இப்போ இப்படிக் கேள்விப்பட்டாக் கிழவிக்கு ஏமாத்தமா இருக்காதா பின்னே?”

இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்ததும் பனையூருக்குப் போய்ப் பெரியம்மாவைப் பார்க்காமலே திரும்பிவிடலாமா என்றுகூடத் தோன்றியது அவனுக்கு, தெற்கே போகப்போகக் கிணற்றுத் தவளை மனப்பான்மை அதிகமாகிறதோ என்றும் அவனுக்குப் பயமாயிருந்தது. யாரோ, “இங்கே ஏன் வந்தாய்? வந்த வழியே திரும்பி ஒடிப்போய்விடு” என்று பிடித்துத் துரத்துவதுபோல் இருந்தன இந்தப் பேச்சுக்கள். “ஒருபுறம் உலகளாவிய பரந்த மனப்பான்மையைப் பற்றிய மேடைப் பேச்சுக்கள், மறுபுறம் சாதாரண விஷயங்களைக்கூட சகஜ பாவத்தோடு ஏற்காத குறுகலான புத்தி, இந்த இரண்டும் தான் இன்றைய இந்தியாவாக இருக்கிறதோ என்றெண்ணி அஞ்சினான் அவன். இன்னும் பனையூருக்குப் போனால் பெரியம்மா எதை எதையெல்லாம் தன்னைக் கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப்