பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

802 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

சாப்பிடக் கூப்பிட்டாள். சாப்பாடு எல்லாம் ரொம்பப் பிரியமாகக் கேட்டு, கேட்டுத்தான் பரிமாறினாள்.அதில் ஒன்றும் குறைவில்லை.

பெரியம்மாவின் அமைதி அவனுக்கு ஆச்சரியத்தையே அளித்தது. அவளிட மிருந்து இரண்டு விதமான தாக்குதல்களை அவன் எதிர்பார்த்தான். ஒன்று ஜூலி விஷயத்தை நேரடியாகக் குறிப்பிட்டு, ஏன்டா, இப்படித் தலையெடுத்தே நீ? என்று திட்டுவாள். அல்லது பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு, ‘இங்கே நல்ல பொண்ணாகப் பார்த்திருக்கேன்டா ஜாதகமெல்லாம் பிரமாதமாப் பொருந்தியிருக்கு பண்ணிக்கிறியா?’ என்று ஆரம்பிப்பாள் என்பதாக அவன் எதிர்பார்த்தான்.

ஆனால் இரண்டுமே நடக்கவில்லை, ரொம்ப அதிசயமாக வழக்கமில்லாத வழக்கமாகச் சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை, பாக்குச் சுண்ணாம்போடு ஒரு தட்டை அவன் முன் நகர்த்தினாள் பெரியம்மா. பிரம்மச்சாரிகள் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளக்கூடாது என்ற அழுத்தமான கொள்கையை உடைய பெரியம்மா தனக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தது, நீ செய்தது எனக்குத் தெரியும்டா திருடா என்பதுபோல் குத்திக் காட்டுவதாகத் தோன்றியது, சுகுமாரனுக்கு அவன் தாம்பூலம் போட்டுக் கொண்டான். மறுபடியும் ஓர் இரண்டு மூன்று மணி நேரம் துக்கம் போட்டான். விழித்து எழுந்திருக்கும்போது மாலை ஐந்துமணி. அவனுக்கு மிகவும் பிடித்தமான ரவா கேசரி, வெங்காய அடை, (வெண்ணையுடன்) சிற்றுண்டி தயாராக இருந்தது.

ஒருவேளை டிபனைக் கொடுக்கும்போது பெரியம்மா அந்தப் பேச்சை ஆரம்பிக்கலாமோ என்று பயந்தான் அவன்.

ஊஹாம்! பெரியம்மா அப்போதும் தன் போரைத் தொடங்கவில்லை.

“இன்னும் ரெண்டு அடை சாப்பிடுடா! உனக்காகச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்கேன். நாக்குச் செத்துப் போய் வந்திருப்பே” என்றாள். அவன் தான் அன்றே புறப்பட்டுப் போக இருப்பதை அவளிடம் சொன்னான்.

"சாயங்காலம் ஏழு மணி பாஸஞ்சருக்குத் திரும்பறேன், பெரியம்மா! வேலை ஆர்டர் இன்னும் கிடைக்கலே, டெல்லியிலேயோ, கல்கத்தாவிலேயோ, எங்கே கிடைக்கும்னும் இன்னும் தெரியலே. ஜாயின் பண்ணினப்புறம் சாவகாசமா இன்னொரு தரம் வரேன்.”

"மகராஜனாப் போயிட்டு வா! ஒண்னுமில்லே, உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. என்னமோ ஒர் ஆசையிலே மனசு கிடந்து அடிச்சுண்டுது. அதான் வரச் சொல்லிக் கடிதாசு எழுதினேன். மேல்நாட்டிலேர்ந்து வந்து இறங்கினதும் இறங்காததுமா உன்னைக் கஷ்டப்படுத்திட்டேனோ என்னமோ, நான் பழைய காலத்து மனுஷி! எனக்கு ஒரு நாகரிகமும் தெரியாதுடா... நீ என் கடிதாசை மதிச்சு வருவியோ வரமாட்டியோன்னு கூட நினைச்சேன் வந்துட்டே! அந்தமட்டிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்.”