பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—————

இரண்டாம் தொகுதி/பனையூர் என்றொரு பல்கலைக்கழகம்🞸 803

அவனுக்குக் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல் குறுகுறுத்தது. பெரியம்மா தன் கன்னத்தில் இரண்டு அறை ஓங்கி அறைந்திருந்தால்கூட அவனுக்குத் திருப்தியாக இருந்திருக்கும் போலிருந்தது. அவள் எதையுமே கேட்காதது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. மனம் தவித்தது.

ஆயிற்று. இரயிலுக்குப் புறப்பட வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டது. “சின்னையா! வண்டியைக் கட்டுடா. ஐயாவை ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் விட்டுட்டு வரணும்” என்று பெரியம்மா வேலைக்காரனுக்கு இரைந்த குரலில் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தாள். “வழியிலே கண்டதை வாங்கிச் சாப்பிட்டு வயத்தைக் கெடுத்துக்காதே! இந்தா, இதை வச்சுக்கோ” என்று இரவு உணவாக இரயிலில் சாப்பிடுவதற்கும் ஒரு பொட்டலம் கொடுத்தாள் பெரியம்மா. அதைவிடப் பெரிய ஆச்சரியம் வண்டியில் பெரியம்மாவும் ஏறிக் கொண்டு ஸ்டேஷன் வரை அவனோடு வழியனுப்பப் புறப்பட்டதுதான்.

அவன் கேட்டான். “நீ ஏன் சிரமப்படனும், பெரியம்மா! நான் போயிக்க மாட்டேனோ? நீ ரயிலடிக்கு வழியனுப்ப வரணுமா என்ன?”

"இருக்கட்டும்டா இதிலே என்ன தப்பு? நீ அத்தனை துரத்திலிருந்து அவ்வளவு பெரிய படிப்புப் படிச்சிட்டுவந்தவன் என் கடிதாசைமதிச்சு இங்கே வந்திருக்கே! நான் உன்னை வழியனுப்பக்கூட ரயிலடி வரை வரக்கூடாதா என்ன?”

ஒன்றும் எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பெரியம்மாவின் நாட்டுப்புறப் பெருந்தன்மையை இதயம் நிறையத் தாங்கி ஏற்று மரியாதை செய்ய வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் பம்பாய், சென்னையில் படித்த உறவினர்கள், ஐ.ஏ.எஸ். உறவினர்கள் நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக நினைக்கும் நகர நண்பர்கள் எல்லாரும் கேட்டதுபோல் ஒரு கொச்சையான அல்லது பச்சையான கேள்வியை இன்னும் பெரியம்மா ஏன் தன்னிடம் கேட்கவில்லை என்பதைத்தான் உள்ளுற எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். ஸ்டேஷன் வந்தது. அவன் வண்டியிலிருந்து இறங்கி டிக்கெட் வாங்கினான். பெரியம்மா இறங்கி அவனுடைய பைகளில் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு அவனுடன் உள்ளே வந்தாள். வெறிச்சோடிக் கிடந்த கிராமாந்தர ஸ்டேஷனின் உட்புறம் வேப்ப மரத்தடியில் அவர்கள் இரயிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கடைசி நிமிஷத்திலாவது பெரியம்மா, “ஏண்டா, எங்களுக்கெல்லாம் தெரியாமே அமெரிக்காவிலேயே ஒரு பொண்ணைக் கலியாணம் பண்ணிட்டு வந்திருக்கியாமே? என்று பச்சையாகத்தன்னைக் கேட்டுவிட்டால் கூட நல்லது போல் தோன்றியது சுகுமாரனுக்கு அவள் அப்படிக் கேட்காவிட்டால் குற்ற உணர்வில் இங்கே தன் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவள் கேட்கவில்லை. தொலைவில் இரயில் புகையும் தெரியத் தொடங்கிவிட்டது.

“எங்கேயிருந்தாலும் உடம்பைக் கவனிச்சுக்கோ எண்ணெய்க் குளி தவறாதே...”