பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

804 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

பெரியம்மா சகஜமாக விடை கொடுக்கும்போது சொல்லும் வார்த்தைகளை, சொல்லத் தொடங்கினாள். சொல்லும்போது அவளுக்குக் கண்கலங்கிவிட்டது.

புறப்படுவதற்குள் தானாகவே அதைச்சொல்லாத பட்சத்தில் பெரியம்மா அதைப் பற்றி கேட்கவே மாட்டாள் என்று தோன்றிவிட்டது அவனுக்கு. சொல்லாமல் போனால் அவன் நெஞ்சே வெந்துவிடும்போல் இருந்தது. இரயிலும் அருகே தென்பட்டது.

"பெரியம்மா! உங்கிட்ட ஒரு விஷயம். வந்து.”

“என்னது?. சொல்லேன். எங்கிட்ட என்னடா வெட்கம் வேண்டிக் கிடக்கு?”

"நான் அமெரிக்காவிலே படிக்கிறப்பவே ஜூலின்னு ஒருபெண்ணைக் காதலிச்சுக் கலியாணம் பண்ணிண்டு வந்திருக்கேன். அவளும் இங்கே என்னோட வந்திருக்கா நீ கோபிச்சுப்பியோன்னு நான் இங்கே அவளை அழைச்சிண்டு வரலை. பம்பாயிலேயே விட்டுவிட்டு வந்திருக்கேன்.”

“தெரியும்டா! நானும் கேள்விப்பட்டேன். அது உன் சொந்த விஷயம்; நீயாச் சொல்லாதபோது உன்னை எப்படி அதைக் கேக்கறதுன்னு தான் நான் அதைக் கேக்கலை.”

"நீ கோபிச்சிப்பியோன்னுநான் சொல்லலை.”

"நீ தப்பா நினைச்சிப்பியோன்னு தான் நான் கேட்கலை.” "நீ இப்படி இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா அவளையும் என்னோட கூட்டிண்டு வந்திருப்பேன் பெரியம்மா”

"கூட்டிண்டு வராதது உன் தப்புதான். வந்திருந்தா நானும் சந்தோஷப் பட்டிருப்பேண்டா.”

சுகுமாரனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. பெரியம்மா எந்தப் பல்கலைக்கழகத்தில் நாகரிகம் படித்தாள்? அவளுக்கு இப்படி இருக்க யார் கற்பித்தார்கள்?’ என்று எண்ணி எண்ணித் தன் மனம் கொள்ளாமல் வியப்பதைத் தவிர அவனால் அவளிடம் ஒன்றும் பதில் பேச முடியவில்லை. இரயில் வந்து புகையை கக்கிக்கொண்டு பெருமூச்சு விட்டபடி நின்றது. அவன் முதல் வகுப்புப் பெட்டியைத் தேடி ஏறிக் கொண்டான். பிளாட்பாரத்து வேப்ப மரத்தடியில் கண்கலங்க நிற்கும் பெரியம்மாவைப் பார்த்துக் கையை ஆட்டினான். கையைப் பதிலுக்கு ஆட்டிவிட்டு வெள்ளைப்புடவைத் தலைப்பால் கண்ணிரைத் துடைத்துக் கொள்வது தெரிந்தது. இரயில் சிறிது தொலைவு சென்றதும் அவன் வளைவிலிருந்து திரும்பிப் பார்த்தபோது, அட்டையில் கட்டியது போன்ற சிறிய ஸ்டேஷன் கட்டமும் வேப்பமரமும் வில்வண்டியும் பெரியம்மாவும் ஒரு தெளிவான படத்தில் தெரிவது போல் தெரிந்தார்கள்.