பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

808 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

கோட்டையும் சலவைக்குப் போட்டு வெச்சிருக்கேன். தட்டிச் சொல்லாம எடுத்து மாட்டிக்குங்கோ...” என்று வற்புறுத்தினாள் அவர் மனைவி.

முதலில் கைலாசநாதனுக்குக் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. சாதாரணமாகக் கிராமத்தில் இருக்கிற நாட்களில் அவர் சட்டைகூடப் போடுவதில்லை. திடீரென்று இத்தனை நாள் அப்படி இருந்ததற்கு வட்டியும் முதலுமாக மாறுவது போல் சூட்டும் கோட்டும் போட நேர்ந்துவிட்டதை ஒரு மனம் ஏற்காவிட்டாலும் இன்னொரு மனத்தில் அவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் போல ஒரு நைப்பாசையும் இருந்தது.

இறுதியில் நைப்பாசையே வென்றது. கைலாசநாதன் சூட்டும் கோட்டுமாக மாப்பிள்ளைக் கோலத்தில் தயாரானபோது அந்த யோசனையை அவருக்குக் கூறிய அவர் மனைவிக்கே தன் கணவனுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும் போலிருந்தது. அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஜான்சனை வரவேற்க ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி அவர் அழைத்திருந்த மற்றவர்களும் சூட்டுக் கோட்டோடு வந்ததுதான். ஒருவர்கூட அந்தக் கிராமத்தின் சகஜமான உடையில் இல்லை. எல்லார் கையிலும் மாலைகள், பூச்செண்டுகள் தயாராய் இருந்தன. நேற்று மாலைதான் ஒட்டத்திற்கு ஆயத்தம் செய்யப்பட்ட அந்தப் பழைய மாடல் ஃபோர்டு கார் நிலையத்தின் வெளியே நின்றது.

ரயில் வந்தது.முதல் வகுப்புப் பெட்டிகளை ஒவ்வொன்றாக நோட்டம் விட்டபின் வெள்ளை முகம் காணாமல் ஏமாற்றம் அடைந்தார் கைலாசநாதன். ஜான்சன் தம்பதி வரவில்லையோ என்று அவர்கள் தயங்கியபோது மல்லிகைப் பூப் போல் கிளாஸ்கோமல் வேஷ்டியும் பஞ்சக்கச்சமும் ஜிப்பாவும், கழுத்தில் துளசி மணிமாலையுமாக ஒரு வெள்ளைக்காரன் மூன்றாம் வகுப்பிலிருந்து இறங்கினான். அவனை அடுத்துக் காஞ்சிபுரம் பட்டுப் புடவையும், ரவிக்கையும் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஒரு வெள்ளைக்காரியும் இறங்கினாள். "ஐ யாம் ஜான்சன்” என்று அவன் தன் மனைவியோடு அருகே வந்து கை கூப்பியபோது கைலாசநாதன் அவனோடு கை குலுக்க வலது கையை நீட்டிக் கொண்டிருந்தார். அவன் கைகுலுக்க முன்வராமல் வணங்கிக் கொண்டே "ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் அன் இன்டியன்,கஸ்டம்" என்றான்.

கைலாசநாதன் முகத்தில் அசடு வழிய மாலையை அவனுக்கும் அவன் மனைவிக்கும் அணிவித்தார்.நூற்றுக்கு நூறு சதவீதம் இந்திய உடையில் வந்திருக்கும் வெளிநாட்டினரை அந்நிய உடையில் வரவேற்க வந்ததை எண்ணிக் கூசுவதற்குக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. எல்லார் முகத்திலும் விளக்கெண்ணெய் வழிந்தது. எல்லாரும் அறிமுகம் செய்து கொண்டனர். அதற்கேற்றாற்போல் காரில் போகும்போது சிரித்துக்கொண்டே."இந்த உடையில் நீங்கள் மிகவும் செயற்கையாகத் தோன்றுகிறீர்களே? தினசரி நீங்கள் இதைத்தான் அணிவீர்களா?” என்று ஜான்சன் கேட்டபோது கைலாசநாதன் பதில் என்ற பெயரில் ஏதோ பூசி மெழுகினார்.