பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———

இரண்டாம் தொகுதி/அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர் 🞸 783

மாலையில் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அந்தணர்கள் ஜபம் செய்வதைக் காண அவனையும், அவன் மனைவியையும் அழைத்துப் போனார் கைலாசநாதன். சினி கேமரா, ஃபிளாஷ் பல்புகள், பேட்டரி சகிதம் ஒலிப்பதிவுச் சாதனங்களுடன் வந்தார்கள் அந்த விருந்தாளிகள். அல்லிப்பட்டியில் முறையாகப் படித்த சாஸ்திரிகள் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தனர். கூட்டமாக அரச மரத்தடியில் ஜபக்கோலத்தில் உட்காரச் செய்யப்பத்து பேராவது வேண்டுமே என்று அந்த இரண்டு சாஸ்திரிகளோடு, பஞ்சாயத்துப் போர்ட் ஹெட்கிளார்க் பரசுராமராவ், ஸெகண்டரி கிரேடு டீச்சர் நாராயணய்யங்கார், கோவில் மணியம் குப்புசாமி ஐயர், இன்னும் ஐந்தாறு சீட்டாட்ட மிராசுதார்கள் எல்லாரையும் திறந்த மார்போடு அமரச் செய்து ஒரு சினிமாவுக்கு ஸெட் தயார் செய்து நடிகர்களையும் உட்காரச் செய்வது போல் அமரச் செய்திருந்தார் கைலாசநாதன். நடுவே ஒரு பூர்ணகும்பமும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக்கூட்டத்தில் இருந்த இரண்டு நிஜமான சாஸ்திரிகளைத் தவிர வேறு யாருக்கும் எந்த மந்திரமும் தெரியாது. கூட்டத்தோடு கூட்டமாக எதையாவது முணுமுணுத்துவிடுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லி வைத்திருந்தார் கைலாசநாதன்.

ஜான்சன் தம்பிவந்ததும் ஜபம் ஆரம்பமாயிற்று.டேப்ரிக்கார்டரை ஒலிப்பதிவுக்கு உரியதாக இயக்கிவிட்டு, மனைவியிடம் படம் எடுக்கும் வேலையை ஒப்படைத்தபின், அமர்ந்திருந்தவர்களுக்கு அருகே வந்து உற்றுக் கேட்கத் தொடங்கினான் ஜான்சன்.

“நீங்களும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்தானே? உங்களுக்கு மட்டும் இந்த ஜபம், அநுஷ்டானம் எதுவுமே கிடையாதா?” என்று திடீரென்று ஜான்சன் தன் பக்கம் திரும்பிக் கேட்கவே கைலாசநாதனின் நிலைமை எக்கச்சக்கமாகப் போயிற்று. அவர் உடனே சட்டென்று தோன்றிய "ஐ யாம் நாட் எ புரோஹித்” என்ற வாக்கியத்தைக் கூறியவுடன், “புரோஹிதர்கள் மட்டும்தான் பிராமணர்களா?” என்று பதிலுக்கு மடக்கினான் ஜான்சன். ‘இதென்னடா வம்பாகப் போயிற்று’ என்று வேண்டா வெறுப்பாகச் சட்டையைக் கழற்றித் துண்டு போல் இடுப்பில் சுற்றிக் கொண்டு அவர்களோடு சேர்ந்து கைலாசநாதனும் சப்பணம் கூட்டி அரசமரத்தடியில் உட்கார்ந்தார்.

மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து சாங்கோபாங்கமா வெற்றிலை புகையிலை போடத் தொடங்கிய ஒருவரையும், பொடி மட்டையைத் தட்டிப்பொடி உறிஞ்சத் தொடங்கிய ஒருவரையும் சுட்டிக்காட்டி,"இது மாதிரிப் புனித காரியங்களின்போது புகையிலை போடுவது, பொடி போடுவது வழக்கமா?” என்று கேட்டான் ஜான்சன். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. வெற்றிலையும் பொடி மட்டையும் உடனே மறைக்கப்பட்டன. தங்களைச் சுட்டிக்காட்டி அந்த வெள்ளைக்காரன் ஏதோ கேட்பதைக் கண்டு பயந்தனர் அவர்கள். அடுத்த சில நிமிஷங்களில் அவர்கள் உச்சரித்த மந்திரங்களைக் கூர்ந்து கேட்ட அவன், கைகள் இரண்டையும் உயர்த்தி நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு டேப் ரிக்கார்டரையும் ஆஃப் செய்தான். சாஸ்திரிகள்.