பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

810 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

இருவரையும் சுட்டிக்காட்டி, “இவர்கள் இருவரும்தான் புருஷஸூக்தம் சொல்கிறார்கள். மற்றவர்கள் எதையோ முணுமுணுக்கிறார்கள்... திஸ் இஸ் நாட் கரெக்” என்று இரைந்தான். இந்த வெள்ளைக்காரனுக்குப் புருஷஸூக்தம் எது, மற்றது எது என்றுகூடத் தெரிந்திருக்கிறதே! என்று அவர்களுக்கு ஆச்சரியமாகப் போயிற்று.

அடுத்த கணமே எப்படி ஒரு சீரான குரலில் சொல்லுவது என்று காட்டுவதற்காக அந்த வெள்ளைக்காரனே,

“ஸஹஸ்ர சீருஷாப் புருஷ” என்று ஸ்பஷ்டமான உச்சரிப்போடு தொடங்கிய போது அவர்களால் தங்கள் ஆச்சரியத்தை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஜபம் எல்லாம் முடிந்ததும் ஜான்சனின் அருகில் வந்து, “சாஸ்திரிகள் இருவருக்கும் இருபது இருபது ரூபாய் வீதமும், மற்றவர்கள் எல்லாருக்கும் தலைக்குப் பத்து பத்து ரூபாய் வீதமும் பணம் தரவேண்டும்” என்று கைலாசநாதன் ஆங்கிலத்தில் கேட்டபோது, "ஆச்சரியமாக இருக்கிறதே? இந்த ஜபதபங்களை எல்லாம் நீங்கள் தினசரி மாலை சுபாவமான அநுஷ்டானமாகச் செய்வீர்கள் என்றல்லாவா நான் கேள்விப்பட்டிருந்தேன்? ஞாயிறன்று நாங்கள் சர்ச்சுக்குப்போவது போல் இது உங்கள் அன்றாட வழக்கம் இல்லையா? இது எனக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டதோ? இந்த மாதிரி நான் எதிர்பார்க்கவில்லையே. பரவாயில்லை, இந்தாருங்கள்; கொடுத்து விட்டு மீதத்தைத் திருப்பித் தாருங்கள்” என்று ஒரு கத்தை ரூபாய் நோட்டுகளைக் கைலாசநாதனின் கையில் திணித்தான் ஜான்சன்.

அன்றிரவு அவன் அமெரிக்கனாயிற்றே என்ற எண்ணத்தில் யாரோ பெர்மிட் ஹோல்டரிடமிருந்து வாங்கிய வெளிநாட்டு மதுபானப்புட்டி ஒன்றையும் சிகரெட் பாக்கெட்டையும் கொண்டு போய்க் கொடுத்தார் கைலாசநாதன். அவன் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டு, “நான் புகை பிடிப்பதுகூட இல்லை; மன்னிக்க வேண்டும். இந்தியாவில் மது வெறுக்கப்படுகிறது என்றும், மதுவிலக்கை அரசாங்கக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான்.

அவ்வாறிருந்தும் இது எப்படி சாத்தியம்' என்று கேட்டான்.

கைலாசநாதன் ஏதோ சொல்லி மழுப்பினார்.

"யூ ஹாவ் நோ நாலட்ஜ் ஆஃப் சான்ஸ்கிரிட் யூ டோண்ட்நோ வேதாஸ் அண்ட் யூநெவர் மீட்யுவர் ப்ரீஸ்ட் தென் வாட் மேக்ஸ் யூ எ ஸெப்பரேட் அண்ட் எலிவேடட் ஸெக்ஷன் ஆஃப் தி ஸொஸைட்டி?” இப்படி அவன் கேட்டபோதும் அவர் சிரித்து மழுப்பத்தான் செய்தார்.

மறுநாள் நாற்று நடும் வயலில் பெண்கள் பாடிய பாட்டுக்களை ரெகார்ட் செய்யும் போதும் இப்படியே நடந்தது. அவற்றில் ஒன்றாவது கிராமத்தின் புராதனமான பாடலாக இல்லை.

"பவுடர் மணம் கமகமக்கப்

பல்லழகு ஜொலி ஜொலிக்க