பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—————

இரண்டாம் தொகுதி/அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர் 🞸 811

நாற்று நடும் ரங்கம்மா
ஏற்றமிறைக்கும் வேளைக்குள்ளே
ஏரோப்ளேன் ஏறி வாரேன்
நாற்று நடும் வேளைக்குள்ளே

ராக்கெட்டில் பறந்து வாரேன்”

என்று பாடப்பட்ட ஒரு பாட்டை அதிலுள்ள வார்த்தைகளைக் கேட்டே அது புராதனமான கிராமீயப் பாட்டு இல்லை என்று கண்டுபிடித்து மறுத்துவிட்டாள் ஜான்சனின் மனைவி. அவள் மீண்டும் மீண்டும் துளைப்பதுபோல் கேட்ட பின்னே அந்தப் பாடல் சென்ற வருடம் ரிலீஸான ஒரு தமிழ்ப்படத்தில் வருவது என்ற உண்மையைக் கைலாசநாதன் ஒப்புக் கொண்டார்.

அதே தினம் மாலையில் ஜான்சன் காண்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலியான மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில், மாப்பிள்ளை, சூட்டு, கோட்டு, டை தரித்துக் காரில் அமர்ந்து வந்ததை ஜிப்பா பஞ்சகச்சத்தோடும், புடவை ரவிக்கையோடும் இருந்து கண்ட ஜான்சன் தம்பதி அதுபற்றிக் கைலாசநாதனை விசாரித்தனர். கைலாசநாதன் பதில் கூறினார்:-

“மாப்பிள்ளை ரொம்பவும் படித்தவரானால் இப்படி டிரஸ் தைத்துத் தர வேண்டியது அவசியம்!”

“”ஓ! யூ கேன் ரெக்கன்னைஸ் அன் எஜுகேடட் மேன் பை ஹிஸ் டிரெஸ் ஒன்லி” என்று சிரித்துக்கொண்டே வினவினான் ஜான்சன்.

அடுத்தநாள் கோலாட்டத்துக்குச் சரியான கோல்கள் கிடைக்காததால் டஜன் கணக்கில் கலர்ப் பென்சில்களை விலைக்கு வாங்கிஅடிக்கச் சொல்லிப் பெண் குழந்தைகளிடம் கொடுத்திருந்தார் கைலாசம். கோலினால் எழும் இனிய நாதம் குச்சிகள் போன்ற பென்சிலால் எழாததாலும் அதிலும் நவீன சினிமாப்பாடல்களே பாடப்பட்டதாலும் ஜான்சன் திருப்தியடையவில்லை. பிரபந்தம் பாடுவதைக் கேட்ட அவன், பாடல்களின் சொற்கள் அதிகம் சிதைக்கப்பட்டு உச்சரிக்கப்படுவதைக் கண்டுபிடித்துச் சொன்னான். அவனுக்குத் தமிழும் நன்றாகத் தெரியும் என்பதை அப்போதுதான் கைலாசம் புரிந்து கொண்டார்.

“அமெரிக்கன் தானே ஒய் பத்து ரூபா கொடுத்தால் வறண்டா போயிடும்? லட்சம் லட்சமா டாலரைஅள்ளிண்டு புஸ்தகம் எழுத வந்திருக்கான். தரட்டுமே தந்தாக் குறைஞ்சா போயிடுவான்?” என்று முதல்நாள்.அரசமரத்தடி ஜபத்தின்போது அவனுக்குத் தமிழ் தெரியாதென்ற நினைப்பில் தான் இரைந்து கூறியதை அவன் புரிந்துகொண்டிருப்பானோ என்ற சந்தேகம் இப்போதுதான் கைலாசத்துக்கு வந்தது. இதை இந்த வெள்ளைக்காரன் டில்லியில் போய் மூர்த்தியிடம் சொல்லிவிடுவானோ என்றும் நினைத்துத் தயங்கியது அவர் மனம்.