பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

812 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

பெருமாள் கோவிலில் தீர்த்தம், சடாரிக்குப் பின்பு துளசிக்குப் பதிலாக ரோஜா, பூ இதழ்களைக் கொடுத்ததும் “துளசி அல்லவா கொடுக்கப்பட வேண்டும்” என்று ஞாபகமாக அர்ச்சகரைக் கேட்டான் ஜான்சன்.

“மன்னிக்கணும்; கோயில் நந்தவனத்திலே இருந்த துளசிச்செடி எல்லாம் பட்டுப் போச்சு! அதனாலேதான்” என்றார் அர்ச்சகர். துளசி கிடைக்காத வைஷ்ணவக் கோயிலை நினைக்கவே வேதனையாக இருந்தது ஜான்சனுக்கு. அது அவனுடைய கடைசி ஏமாற்றம். அதுவே அவனது எல்லா ஏமாற்றங்களையும் உருவகம் செய்வதாகவும் அமைந்தது.

ஒரு மாதம் தங்குவதற்குத் திட்டமிட்டு வந்திருந்த ஜான்சனும் அவன் மனைவியும் நான்காம் நாளே அல்லிப்பட்டியை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள். அந்த நான்கு நாட்களில் பணம் நிறையச் செலவாகியிருந்தும் விஷய லாபம் சிறிதும் கிடைக்கவில்லை. பழையதான ஓர் இந்தியக் கிராமத்தை அவன் புரிந்து கொண்டிருந்த அளவுகூட அந்தக் கிராமத்தில் இருப்பவர்களே புரிந்து கொண்டிராதது அவனைத் திடுக்கிட வைத்தது. சென்னை நகரத்துக்குத் திரும்பி வந்ததும் அவன் இரண்டு விமானத் தபால்களை அவசர அவசரமாக எழுதினான். அவற்றில் ஒரு கடிதம் தான் எழுத இருக்கும் புத்தகத்தை வெளியிடப் போகும் அமெரிக்கப் பதிப்பாளருக்கு மற்றொன்று டில்லியிலுள்ள கே.கே.மூர்த்திக்கு.

அமெரிக்கப் பதிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் “புத்தகத்தின் தலைப்பை ஸவுத் இன்டியன் வில்லேஜ் என்பதற்கு பதில் டீஜெனரேஷன் ஆஃப் எ ஸவுத் இன்டியன் வில்லேஜ்' என்று தயை கூர்ந்து மாற்றிவிடவும்” என்று எழுதியிருந்தான். மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலோ, "உங்கள் கிராமத்துப் பெருமாள் கோயில் நந்தவனுக்குள் துளசிச் செடி பட்டுப் போனதைப் போல் பழைமையான பல விஷயங்களும் பட்டுப்போய்விட்டன.ஒரு கிராமத்தில் நதிவற்றலாம்; நாகரிகம் வற்றக் கூடாது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வேதங்களையும் தமிழிலக்கியங்களையும் படித்து நான் அறிந்ததென் இந்தியக் கிராமத்தைப் பற்றி அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கே என்னைப் போல் அந்நியன் ஒருவன் தான் ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருந்தான் அந்த வெளிநாட்டுப் பேராசிரியன். - (கலைமகள், தீபாவளி மலர், 1970)