பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

814 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

அப்படியே வந்தாலும் இனி அதிக நாள் இங்கே தங்கி வேலை பார்க்கமாட்டாள். கணவனோடு அவன் வேலை பார்க்கிற ஊருக்கு அவள் போக வேண்டியிருக்கும். அவள் போய்விட்டால் அப்புறம் ஒரு நம்பிக்கையான புதுக்காரியதரிசியைத் தேடி அமர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

முப்பத்தெட்டு வயதுவரை ‘குமாரி’யாகவே இருக்கும் அவளைப் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகையால் அந்தச் சமயத்தில் புதிதாகத் திருமணமான பெண்ணின் மனநிலை எப்படிஎப்படி இருக்கும் என்று முழுமையாகக் கற்பனைசெய்ய முடியாமல் இருந்தது. பல படங்களில் திருமணக் காட்சிகளில் அவள் மணமகளாக நடித்திருக்கிறாள்; குடும்பம் நடத்தியிருக்கிறாள்; குழந்தை குட்டிகளைக் காப்பாற்றும் தாயாக வேடந் தாங்கியிருக்கிறாள். ஆனால் அவை எல்லாமே நடிப்பு. வாழ்க்கை நடிப்பிலிருந்து வேறுபாடுடையதாகத் தான் இருக்க வேண்டும்.

அது என்ன வேறுபாடு, எந்த அளவு வேறுபாடு என்பதைத்தான் அவளால் துல்லியமாக உணரவோ நினைக்கவோ முடியாமல் இருந்தது. ஆவலால் உந்தப் பட்டவளாக அறைக்குள் போய் மேஜையில் கிடந்த பல கடிதங்களுக்கும் அழைப்பிதழ்களுக்கும் நடுவே தேடி அந்தக் கல்யாணப் பத்திரிகையை மட்டும் தனியே எடுத்தாள்.

ஒரு விநாடியில் படித்து முடித்து விடக்கூடிய அந்தக் கல்யாணப் பத்திரிகையை ஒருமணிநேரமாகக் கையில் வைத்துத் திரும்பத் திரும்பப்படிப்பதும் யோசிப்பதுமாக இருந்தாள் அவள்.

அவளுடைய காரியதரிசிப் பெண்ணைக் குருவாயூரில் மணந்து கொள்ள இருந்த மாப்பிள்ளைக்குப்பம்பாயில் உத்தியோகம் என்பதை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கணவன் பம்பாயிலும், அவள் சென்னையிலுமாக உத்யோகம் பார்ப்பது என்பது சாத்தியமல்ல. உடனே இல்லாவிட்டாலும் ஒரு மாதம் கழித்தாவது அவள் இந்த வேலையை விட்டுப் பம்பாய் போய்விடுவாள் என்பதை இப்போது சுலபமாகவே அநுமானம் செய்து கொள்ள முடிந்தது.

ஒருநாளும் இல்லாத புதுமையாக அன்று தான் ஏன் அப்படி டிரைவரிடம் போய், "உனக்கு எத்தனை குழந்தைங்க” என்று கேட்டு வைத்தோம் என்பதை இப்போது நினைத்தபோது அதைக் கேட்டே இருக்க வேண்டாம் என்று பட்டது அந்தக் கேள்விக்கு அவன் பதில் கூறியபோது தன் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூசி வேறெங்கோ பார்த்துக் கொண்டே பதில் சொல்லியதையும் இப்போது நினைவுகூர்ந்தாள் அவள்.

கீழே கூர்க்கா பங்களாவின் முன்புறத்து விளக்குகளுக்கான சுவிட்சுகளை ஒவ்வொன்றாக அணைக்கும் ஒலி கேட்டது. இரவு மணி பத்துக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் சரியாக இந்த நேரத்துக்கு விளக்குகளை அணைத்துவிட்டு முன்புறம் கேட் அருகே உள்ள தன் அறைக்குத் தூங்கப் போய்விடுவான் கூர்க்கா. அதற்குப்பின் தான் எங்காவது ஸ்டுடியோவிலிருந்து தாமதமாகத் திரும்பினால் கதவுகளைக் காருக்காகத் திறந்துவிட்டு மூடும் வேலைதான். நேற்றோ, இன்றோ, நாளையோ தான் எங்கும்