பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

818 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

காட்டினாலும் முகம் முற்றியிருப்பதை அவளே உணர்ந்தாள். கண்ணிமையின் கனிவும் குறுகுறுப்பும் தெரியும் வேறு பல இளம்பெண்களின் முகத்திலிருந்து தன் முகம் வேறுபடுவதை இப்போது தன் மேல் தனக்கே ஏற்படும் ஒருவித நிர்தாட்சன்யத்தோடு உணர்ந்தாள் அவள். மேக்கப் போட்டு காமிராவில் பிடித்துப் படமாகப் போகும் போது இந்த முகந்தான் பலரது உள்ளங்களைச் சூறையாடும் என்பதை நம்புவது இப்போது அவளுக்கே அசாத்தியமாக இருந்தது. ஒப்பு நோக்கி உணர்வதற்காக அவளே பென்சிலை எடுத்துப் புருவங்களைத் தீட்டிக் கொண்டு பவுடர் பூசி, நகைகளை அணிந்து மறுபடி பார்த்தாள். இப்போது நம்பிக்கை அளிக்கிற வசீகரம் தெரிந்தது.

இரவு மணி இரண்டை நெருங்கியிருக்க வேண்டும். தெருவில் இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டுப் போகிற கூட்டத்தின் குரல்கள் திடீரென்று வால்யூமை அதிகப்படுத்தின ரேடியோவிலிருந்து கேட்பதுபோல் கேட்டன. அதில் யாரோ ஒருத்தன் கொச்சையாகவும் பச்சையாகவும் அவளைப் பற்றி உரத்த குரலில் தன்னுடன் வருகிறவனிடம் பேசிக் கொண்டு போன வாக்கியத்தை அவளும் கேட்டாள்.

உடனே தூங்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தூங்க வேண்டும். பணம், புகழ், வேதனை, பெயர் புரியாத ஊமை அவஸ்தை அத்தனையையும் மறக்கத் தூங்குவதுதான் ஒரே வழி. ஆனால் தூக்கமும் வரவில்லை. அந்தக் கல்யாணப் பத்திரிகை, குழந்தை குட்டிகளோடு மறுநாள் வீட்டில் தங்கிப் பண்டிகை கொண்டாடப் போன டிரைவர், கல்யாணமாகி நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகைகள் எல்லாருமே திரும்பத் திரும்ப நினைவு வந்து தூக்கத்தை வரவிடாமற் செய்து கொண்டிருந்தனர்.

எப்படியும் தூங்கியே தீருவதென்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள் அவள்.இன்னதென்று சொல்ல முடியாமல், ஏதோ மனத்தைக் குடைந்தது; அதை ஒரு வாக்கியத்திலும் சொல்ல முடியாது, ஒராயிரம் வாக்கியத்திலும் சொல்ல முடியாது போலிருந்தது.

படுக்கையில் புரண்டபடியே எதை எதையோ ஒழுங்காகவும், தாறுமாறாகவும் நினைத்தாள் செழுமையான முகமும், அரும்பிய மீசையுமாக அந்தக் கூர்க்கா தோட்டத்தில் நடந்து வருவதை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தாள். தெருவில் இரண்டாவது ஆட்டம் படம் விட்டுப் போனவர்கள் பேசிக் கொண்டு போனதை மீண்டும் நினைத்தாள்படுக்கை ஒரு கொந்தளிக்கும் சமுத்திரமாகியது. உறக்கம் மட்டும் வரவில்லை. கரையும் தெரியவில்லை.

அந்தக் கரை தெரிகிறவரை நீந்தியே ஆகவேண்டும். கரையும் தெரியவில்லை. உறக்கமும் வரவில்லை. ஆனால் அதற்குள் காலை வந்துவிட்டது. வீடு பெருக்கித் தரை மெழுகிக் கோலம் போடுகிற ஆயா வந்தாள். அவள் படுக்கையறையை பெருக்க வந்தபோதும் பிரேமகுமாரி விழித்தபடி படுத்திருந்தாள். படுக்கையிலிருந்தே நேர் எதிரில் தெரிந்த பால்கனியின் தொட்டிச் செடிகள் இன்னும் வாடியே தென்பட்டன.