பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————

இரண்டாம் தொகுதி / குரோட்டன்ஸ் * 819

அவளுக்கு முன் இரவில் தான் தண்ணீர் ஊற்றியது நினைவு வந்தது. அப்படியும் அந்தச் செடிகள் வாடியிருக்கவே தான் ஊற்றிய நீர் போதாதோ என்று நினைதது, "ஆயா! நீ பெருக்கறதுக்கு முன்னே அந்தத் தொட்டிச் செடிங்களுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு அப்புறம் பெருக்கு.நேற்று நான் ஊத்தினேன்.அது போதாது போலிருக்கு” என்றாள் அவள். ஆயாவாளியில் தண்ணிர் எடுத்துக்கொண்டு போனாள். போனவள் சில விநாடிகளில் திரும்பிவந்து,"தண்ணி ஊத்தாததுனாலே கோளாறு இல்லிங்கம்மா. தொட்டிலே மண் மாத்தனும், அடி மண் செத்துப் போச்சு செடிக்கு வேரூன்றதுக்கு இடம் இல்லே. எவ்வளவு தண்ணி ஊத்தினாலும் வேரூன்றத்துக்கு மண் இல்லாட்டி வாடித்தானம்மா போவும்.”

“......”

“தோட்டத்திலே மரத்தைப் பாருங்கம்மா. நாம தண்ணி ஊத்தாட்டியும் அது ஜிலுஜிலுன்னுதான் நிக்குது. தொட்டிச் செடி அப்பிடியா? கொஞ்ச மண்ணிலே வேர் பரவறதுக்கு எடம் எது? அந்தக் கொஞ்ச மண்ணும் உரம் செத்துப் போனா இன்னா செய்யிறது?”

“......”

பிரேமகுமாரிக்கு மெய் சிலிர்த்தது. இரவெல்லாம் அவளுக்கு ஒரு வாக்கியத்திலும் சொல்லத் தெரியாமல் இருந்த வேதனை எதுவோ அதை இந்த ஆயா ஒரே வர்ககியத்தில் துல்லியமாகச் சொல்லியே விட்டாள்.

“வேரூன்ற மண் வேண்டும்.”

உறக்கமின்றி ஓயாமல் நீந்தி நீந்தி அலுத்தபின் கரை தெரிந்தாற்போலிருந்தது. ஆனால் அந்தக் கரையை அடைவதற்கு இன்னும் நெடுந்துரம் நீந்த வேண்டும் போலவும் இருந்தது.

சிறிதுநேரத்துக்கெல்லாம் கூர்க்காவைக் கூப்பிட்டு வாடிப்போன அந்த மூன்று தொட்டிக் குரோட்டன்ஸ்களையும் தோட்டத்தின் ஒரு மூலையில் கொண்டுபோய் போட்டு உடைத்து விடும்படி கட்டளையிட்டாள் அவள்.

தொட்டிச் செடிகளை எடுத்தபின் பால்கனி வெறிச் சென்றிருந்தது. ஆனால் நேர் எதிரே தோட்டத்தின் மகிழ மரமும், வேப்ப மரமும் பச்சென்று அடர்த்தியாய்த் தெரிந்தன. (கல்கி, தீபாவளி மலர், 1971)