பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————

இரண்டாம் தொகுதி/ரிடயர்ட் ஆபீஸர் + என்.ஜி.ஓ.+ காலை நேரம்🞸 783

"ஆமாமா நீங்க சொல்றதுதான் சரி...”

தலையை ஆட்டிவிட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது இருபது. ஒன்பதரைக்குள்ளாவது லாண்டரியிலிருந்து திரும்பினால்தான் அவசர அவசரமாக ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு பஸ்ஸை ஒடிப் பிடித்துப் பத்தேகாலுக்கு ஆபீஸ் போகலாம். எனவே துணிந்து குறுக்கிட்டு,

“ரொம்ப அவசரம். வந்து. ஒரு சின்ன ஹெல்ப்”

“புரட்சியை என்னமா ஒடுக்கியிருக்கான் பாருமேன்.

“சும்மாவா பின்னே..?” - “நாளைக்கு இதைப் பத்தி ஒரு லெட்டர் அனுப்பலாம்னு இருக்கேன். நம்ம ஃபாரின் பாலிஸியை உடனே மாத்தியாகணும். சுத்த காயலான் கடை பாலிஸியாய்ப் போச்சு.”

“சந்தேகம் என்ன? நீங்க சொல்றது தான் சரி. இப்ப நான் வந்தது.”

“நீர் எப்ப வந்தாலும் கால்லே வெந்நீரைக் கொட்டிண்டேவர்ரீர்.என்ன அவசரம் இப்ப.”

“ஆபீஸ் போகனுமே. லேட்டாயிடுமே?”

“என்ன லேட்? பிரமாத லேட் உங்களை எவன் கேக்கறான் இப்பல்லாம். அந்த நாள்லே. பாருங்கோ. பிரிட்டீஷ்காரன்.”

“சும்மாவாபின்னே.”

“ரெண்டு கொரியாவும்கூட ஒண்ணாகணும்னு நினைக்கிறதாமே ஐயா?.”

மணி ஒன்பது நாற்பத்தைந்து. இன்னும் குருபாதம் செவி சாய்க்கவில்லை. ஐந்து ரூபாய் கைமாற்றுக்காகக் குருபாதம் இழுத்த இழுப்புக்கெல்லாம் கொரியாவோ, சூடானோ, தைவானோ, பீகிங்கோ அங்கெல்லாம் இழுபட்டான். அவரிடம் எப்போதும் அவன் சிக்குவதில்லை. ஜாக்கிரதையாக ஞாயிற்றுக்கிழமைதான் போவது வழக்கம். மற்ற நாட்களில் போனால் தப்ப முடியாது. இன்று அழுக்குத் துணியோடு ஆபீஸ் போக மனமில்லாததால் இப்படி வகையாக வந்து மாட்டிக் கொண்டான். “இன்னும் அதுக்கு நீங்க பதிலே சொல்லலியே. அதுதான் அந்த செக்யூரிட்டி கவுன்ஸில் விஷயம்.”

“எந்த ஸெக்யூரிடி கவுன்ஸில் விஷயம்...”

“ஐ.நா.ஸெக்யூரிடி கவுன்ஸில் விஷயம்..."

அவனுக்கு ஐ.நா. மேலும் அதன் உலகமகா சக்திவாய்ந்த ஸெக்யூரிட்டிகவுன்ஸில் மேலும் கோபம் கோபமாக வந்தது. மணி பத்து.இனிமேல் லாண்ட்ரி போய்த் திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் போன மாதிரித்தான்.