பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

822 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“மாஸேதுங்கின் சீனாவை ஐநாவிலே சேர்த்துண்டு, இவனேசியாங்-கே ஷேக்கை மாட்டி வச்சுடப் போறான்.”

"ஆமாமா. நீங்க சொல்றபடிதான் நடக்கும்...”

“அதில்லே ஐயா! நான் சொல்றதிலே உள்ள தாத்பரியம் உமக்குப் புரியனும்! எப்படியும் அந்தச் சீனாவை ஐநாவிலே சேர்க்கறதுதான் உலகத்துக்கு நல்லது. என்ன சொல்றீர்...?”

"ஆமாமா. நீங்க சொல்றதுதான் சரி. இப்ப நான் வந்தது...”

“என்னய்யா இது? ஆடிக்கொருதரம், அமாவாசைக்கு ஒருதரம் வரீர். வந்தால் பறக்கிறீரே...”

“இல்லே சார் நான்... இப்ப வந்தது எதுக்குன்னா..?”

“எல்லாமே திடீர் திடீர்னு மாறிண்டிருக்கு. நிக்ஸன் அமெரிக்காவிலிருந்து சீனா போகப் போறான்.”

"சும்மாவா. பின்னே?”

"அதையடுத்து செஞ்சீனா ஐநாவிலே சேர வழி பிறக்கப் போறது...”

மணி பத்தே முக்கால். இனிமேல் ஆபீஸுக்கு லீவு போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

"அப்புறம் செக்யூரிட்டி கவுன்ஸிலே. வீட்டோ.”

- ஐ.நா. மேலும், செக்யூரிட்டி கவுன்ஸில் மேலும், சீனா மேலும் நியூஸ் பேப்பர்கள் மேலும், ரிடயர்ட்ஆபீஸர்கள் மேலும் மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. (கணையாழி, ஆகஸ்டு, 1971)