பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

824 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“நம்ப அஸோஸியேஷன் டிரெஷரர் அனந்தாச்சாரி வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருக்காம் சார்.”

“அனந்தாச்சாரி வீணா மனசை அலட்டிக்கிறார்... தப்பா நினைச்சு யார் பாவத்தையாவது கட்டிக்கணுமா, என்ன?”

“நேத்து ராத்திரி அவர் வீட்டிலேயே வந்து யாரோ கதவைத் தட்டிக் கலாட்டா பண்ணிட்டாங்களாம்.”

“சரி எனக்கென்ன வந்தது? ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்குக்கு சர்க்குலர் அனுப்பிடு ஆனா அஜெண்டாவிலே “இம்மாரல் டிராஃபிக்”னு போடாதே. சில முக்கிய விஷயங்கள்’னு மட்டும் போட்டு அனுப்பு, போதும்.”

“சரி சார். அப்படியே போட்டு அனுப்பறேன். நீங்க அன்னிக்குக் கண்டிப்பா வந்துடனும்.”

ஞாயிற்றுக்கிழமை காலை காலனி அஸோஸியேஷன் அறையில் கூட்டம் கூடியது. தலைவர் சாமிநாதன் அமைதியாக இருந்தார். கூட்டத்தை வேண்டிக் கடிதம் எழுதிய அனந்தாச்சாரி முதலியவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தம் போட்டார்கள். அனந்தாச்சாரி மிகவும் கோபமாக முறையிட்டார்.

“இப்படியே விட்டுட்டா இந்தக் காலனியிலே ஒரு குடும்பஸ்தன்கூட மானமா நடமாட முடியாது. ராத்திரி பகல்னு பாராமே ஸ்கூட்டர்லியும், டாக்ஸியிலுமாக ஆள்கள் வராங்க. சிலர் குடிவெறியிலே வந்து எந்த வீடுன்னு தெரியாமே அக்கம்பக்கத்து வீட்டிலே கதவைத் தட்றாங்க ரசாபாசமா இருக்கு இதை உடனே போலீஸ் கமிஷனருக்கு எழுதியாகணும்.”

“இந்தத் தொல்லையை ஒடுக்க முடியாட்டா நம்ம அஸோஸியேஷன் இருந்தே பிரயோசனம் இல்லே.”

“நம்ம தலைவர் சாமிநாதன் இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கணும்னுதான் புரியலை.”

“நீங்க சொல்றபடி இருந்தா அதைப்பற்றிக் கமிஷனருக்கு எழுதறதுலே எனக்கு ரெண்டாவது அபிப்பிராயம் கிடையாது. ஆனா நாம ஓர் அட்ரஸைக் குடுத்து அந்த அட்ரஸிலே தப்பு நடக்கறதுன்னும் எழுதி அங்கே அது நடக்கலைன்னா அதுனாலே யார் யார் மனசு புண்படும்னும் பார்க்கணும்.”

“அவா மனசு புண்படுமோ இல்லியோ உங்க மனசு இப்பவே புண்படறதாகத் தெரிகிறது.”

இதைக் கேட்டுச் சாமிநாதனுக்குக்கூடக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. அவர் கறாராக ஆனால் அதே சமயத்தில் பதறாமல் பதில் சொன்னார்."