பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/ மிகை 🞸 783

“வீண் பேச்சு எதற்கு? நான் நம்ம அஸோஸியேஷன் சார்பில் உடனே போலீஸ் கம்ப்ளெயின்ட் தரத் தயார், ஆனால் அதுக்கு முன்னே அந்த 123 பி மாடிக்கு ஒரு தடவை போய்ப் பார்த்து உறுதிப்படுத்திக்காம அதைச் செய்யக்கூடாது. எத்தனை பேர் என்னோட வர்றீங்க?”

எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள்.

“புகை வர இடத்திலே தீ இருக்கான்னு போய்ப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனுமோ?”

“ஆமாம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா நீங்கபடற சந்தேகம் எனக்கு இல்லே."

“அப்ப நீங்களே போய்ப் பார்த்துட்டு வாங்கோ.”

“நான் பார்த்துட்டு வந்து சொன்னா அதை நீங்க நம்பணுமே, ஐயா?”

“அந்த வீட்டுலே ஒரு மலையாளத்துக் கிழவன் இருக்கான்! அவன்தான் இதை நடத்தறானாம்.”

“நான்கூட மலையாளத்தான்தான் கிழவனுக்கு ஆகிற வயசு எனக்கும் ஆச்சு.” என்றார் சாமிநாதன்.

“நீங்களும் மலையாளம், அவாளும் மலையாளம். அதான் உங்களுக்குக் கரிசனை வந்திட்டது போலிருக்கு.”

"நோ, நோ, சட்னு இப்படிச் சொல்லப்படாது நீங்க.. இதோ இப்ப மணி பத்து. பத்தரை மணிக்கு இப்படியே தாம் எல்லோருமா அந்த 123 பி மாடிக்குப் போவோம். அங்கே நீங்க சொல்றபடி இருந்தா உடனே நானே போலீசுக்கு போன் பண்றேன்.”

சாமிநாதனின் சவாலை மற்றவர்கள் ஏற்றேயாக வேண்டியிருந்தது. பத்தரை மணிக்கு எல்லோருமாகப் புறப்பட்டார்கள். போகும்போதே அங்கே இருக்கும் இரண்டு மலையாள யுவதிகள் பற்றியும் அவர்கள் தளுக்குவது, மினுக்குவது பற்றியும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டு வந்தார் அனந்தாச்சாரி. சாமிநாதன் பதில் பேசவே இல்லை. அனந்தாச்சாரிக்குச் சாமிநாதனின் மெளனம் கோபமூட்டுவதாயிருந்தது.

“நான் இவ்வளவு சொல்றேனே சார் அசையறாரா பாருங்களேன்..? நம்ம காலனியிலே இப்படி ஒண்னு இருக்கும்னு அவர் நம்பவே தயாராயில்லே”

இதற்கும் சாமிநாதன் மறுமொழி எதுவும் கூறவில்லை. 123 பி மாடிப்படிக்குத் தெருவிலிருந்தே கதவு இருந்தது. சாமிநாதனைத் தவிர மற்றவர்கள் வீதியிலேயே தயங்கினர். கதவில் குருவாயூரப்பன் படம் ஒட்டியிருந்தது. சாமிநாதன்தான் கதவைத் தட்டினார்.

அனந்தாச்சாரி சொல்லிய இரண்டு மலையாள யுவதிகளில் ஒருத்தித்தான் வந்து கதவைத் திறந்தாள்.அவள் நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று, அந்த நெற்றியின் பொன் நிறத்தோடு பொருந்தியிருந்தது.நீராடிய கூந்தல் மேகமாய் முதுகில் அலைய வெண்நிற