பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

826 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

நேரியல் கட்டியிருந்தாள் அவள் கையலகச் சரிகைக் கரையுடன் கூடிய அந்த வெள்ளை முண்டு அவளுடைய அழகுக்கு அழகு செய்வதாயிருந்தது.

சாமிநாதன் மலையாளத்தில் அவளிடம் ஏதோ விசாரித்தார். அவள் அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டுசென்றாள்.சாமிநாதன் முதலிலும் மற்றவர்கள் தயங்கித் தயங்கிப் பின்னாலுமாகப் படியேறினார்கள். மாடி முகப்பு ஹாலில் வரிசையாகப் போட்டிருந்த சோபாக்களில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டுச் சாமிநாதன் மட்டும் உள்ளே போனார். போனவர் சற்று நேரத்துக்கெல்லாம் நெற்றியில் சந்தனக்கீற்றோடு திரும்பினார்.

“நீங்களும் வாருங்கள்” என்று அவரே மற்றவர்களை அழைத்தார்.

எல்லாரும் முகம் கோணியபடி சாமிநாதனைப் பின் தொடர்ந்தார்கள். சாம்பிராணி ஊதுவத்தி வாசனை கோயிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

சாமிநாதன் அவர்களை அழைத்துச் சென்ற இடம் பூஜையறை. அதில் அந்த மலையாளத்துக் கிழவர் அமர்ந்து பூஜை செய்துகொண்டிருந்தார். சிவப்பழமாக அமர்ந்திருந்தார் அவர் எல்லாரும் மறு பேச்சுப் பேசாமல் பன்னிர் இலை மேல்வைத்து அவர் கொடுத்த சந்தனத்தை வாங்கிக் கொண்டார்கள்.

“ஏண்டா சாமீ. இத்தனை வருஷத்து விரோதத்துக்கு அப்புறம் இன்னிக்காவது இங்க வர வழி தெரிஞ்சுதா உனக்கு?” என்று கிழவர் தொடங்கியதும் மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். சாமிநாதன் கூறினார் :

“மன்னிக்க வேண்டும், மிஸ்டர் அனந்தாச்சாரி! இவர் என் சிற்றப்பா சந்திரசேகரன். ரொம்ப காலமாக என் தகப்பனார் நாளிலிருந்து எங்கள் குடும்பங்களுக்குள் பகை இருந்தது.இவர் சமீபத்தில் இங்கே குடிவந்த பின்பும் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இவர் இங்கே வந்திருப்பது தெரிந்தும்கூட நான் இவரைப் பார்க்க வரவில்லை. இவருக்குத் தொழில் ஜோஸியம். இரவு பகல் பாராமல் நிறைய வியாபாரிகளும், நண்பர்களும் வாடிக்கைக்காரர்களும் ஏதாவது பிரசனம் கேட்க இவரிடம் வருவார்கள். பெண்கள் இருவரும் இவருடைய குழந்தைகள். தாயில்லாக் குழந்தைகளாக இவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. உங்களால்தான் இன்று நாங்கள் சந்திக்கவும் பேசவும் நேர்ந்திருக்கிறது. இதை ஈசுவர கிருபை என்றுதான் சொல்ல வேண்டும்”

அனந்தாச்சாரிக்கும் மற்றவர்களுக்கும் முகத்தில் அசடு வழியத் தொடங்கியது. அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தபின் பெண்கள் இருவரிடமும், பெரியவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டார் சாமிநாதன்.